Home Featured நாடு மஇகா: சுப்ரா-சோதிநாதன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

மஇகா: சுப்ரா-சோதிநாதன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

636
0
SHARE
Ad

subramaniam-sothinathan-combo

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இணைந்த அணியினர் மீண்டும் மஇகாவுக்கு திரும்புவது தொடர்பில், நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் குறிப்பிடத்தக்க இணக்கமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில உயர்மட்டத் தலைவர்களுக்கிடையில் இன்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்புக் கூட்டங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அதன் மூலம் பேச்சு வார்த்தைகள் ஏறத்தாழ சுமுகமான இறுதிக் கட்ட முடிவுகளை எட்டுவதற்கு காலம் கனிந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

palanivel-micநாளை வெள்ளிக்கிழமை பழனிவேல்-சோதிநாதன் அணியினர் தலைநகரில் தங்களுக்கிடையில் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தக் கூடும் என்ற ஆரூடங்களும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்துடன் சோதிநாதன் நடத்தி வரும் பேச்சு வார்த்தைகளுக்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி என்றும் அதற்குள் தன்னால் ஓர் இணக்கமான உடன்பாடு காண முடியவில்லையென்றால், பேச்சு வார்த்தையிலிருந்து தான் விலகி விடப் போவதாகவும் சோதிநாதன் ஏற்கனவே அறிவித்திருக்கின்றார்.

பழனி-சோதி அணியினரில் பெரும்பாலோர் நீதிமன்றப் போராட்டங்களைக் கைவிட்டு, மீண்டும் மஇகாவில் இணைந்து அரசியல் பணியாற்றுவதையே விரும்புகின்றனர் என்பதும் பரவலாக உறுதியாகியுள்ளது.

இதுவரை, வேட்புமனுத் தாக்கல் செய்யாத மஇகா கிளைகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக மஇகா தலைமையகம் அந்தக் கிளைகளின் உறுப்பினர்களுக்கான சந்தாவை இந்த மாதத் தொடக்கத்தில் பெற்றுக் கொள்ளத் தொடங்கியது. இதன் வழி மேலும் பல கிளைகள் மீண்டும் மஇகாவுக்குள் இணைந்துள்ளதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோதி-சுப்ரா பேச்சு வார்த்தை

Dato S.Sothinathanபழனிவேல் அணியினரின் கோரிக்கைகளோடு, சோதிநாதன் டாக்டர் சுப்ராவுடன் தனியாகவே இந்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். ஒரு குழுவாக சென்று சுப்ராவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என பழனிவேல் அணித் தலைவர்களில் ஒரு சிலர் விரும்பினாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல், அனைவரின் கோரிக்கைகளோடு தனிப்பட்ட முறையில் சோதிநாதன், சுப்ராவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார் என்றும் அதன் காரணமாகவே, இந்தப் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் பழனிவேல் தரப்பைச் சேர்ந்த சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சோதிநாதன் தலைமைக்கும், பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபடுவதற்கும் பழனிவேல் அணியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளதாகவும், அவர் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பெரும்பாலான தொகுதித் தலைவர்களும், கிளைத் தலைவர்களும்  மஇகாவுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கட்சி அளவிலும், பழனிவேல் அணியிலும் தனிநபராக அதிகமான செல்வாக்கு பெற்ற தலைவராக சோதிநாதன் கருதப்படுவதால், அவரது தலைமையின் கீழ் எதிர் தரப்பு அணியினர் செயல்பட்டால் மட்டுமே முறையான தீர்வுகள் பிறக்கும் என்ற நோக்கில், மஇகா தலைமைத்துவமும், தேசிய முன்னணி தலைமைத்துவமும் அவருடனான பேச்சுவார்த்தைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர் என்றும் கருதப்படுகின்றது.

Palanivel -Sothinathan-Balakrishan

பழனிவேல் தரப்பில் ஒருசிலர் மட்டும், எங்கே பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற்றால், பாராட்டுகள் அனைத்தும்  சோதிநாதனுக்கே தனிப்பட்ட முறையில் போய்விடும் என்ற எண்ணத்தில் பேச்சு வார்த்தைகளுக்கு பல்வேறு முட்டுக் கட்டைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தி வருவதாகவும் சில தரப்புகள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், “நான் தனி ஒருவனாகத்தான் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவேன். அனைவருக்கும் இணக்கமான முடிவுகளைக் கொண்டுவருவேன். என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்னுடன் வாருங்கள். வராதவர்கள் பற்றி கவலையில்லை. அப்படியே சுமுகமான முடிவுகளை என்னால் அடைய முடியாமல் போனால், மஇகாவுடன் மீண்டும் இணையும் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகி விடுவேன்” என்று சோதிநாதன் உறுதியுடன் கூறிவிட்டதால், அனைவரும் தற்போது வேறு வழியின்றி அவருக்கு ஆதரவு தந்து வருகின்றனர்.

இன்னும் இரண்டு நாட்களில் பேச்சு வார்த்தைகளின் முடிவுகள், போக்குகள் குறித்த தெளிவான விளக்கங்கள் வெளியாகத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்