உலகிலேயே திகில், மர்மங்கள் நிறைந்த குறும்படங்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்களை அங்கீகரிப்பதற்கென நடத்தப்படும் முதல் மற்றும் ஒரே திரைப்பட விழாவாக புவேர்ட்டோ ரிக்கோ திகில் திரைப்பட விழா (Puerto Rico Horror Film Fest – PRHFF) கருதப்பட்டு வருகின்றது.
திகில் திரைப்படங்களுக்கான சிறந்த ஒளிப்பதிவை அங்கீகரிப்பதே இவ்விழாவின் நோக்கம் என இத்திரைப்பட விழா நிர்வாகம் தெரிவிக்கின்றது.
அதோடு, இத்திரைப்படவிழா பற்றி பிரபல மூவிமேக்கர் மேகசின் வெளியிட்டுள்ள கருத்தில், உலகிலேயே 13 மிகச் சிறந்த திரைப்பட விழாக்களில் புவேர்ட்டோ ரிக்கோ திகில் திரைப்பட விழாவும் ஒன்று. அதற்காக உயிரைக் கூட கொடுக்கலாம் என்று வர்ணித்துள்ளது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த அனைத்துலகத் திரைப்பட விழாவில், மலேசியத் திரைப்படமான”என் வீட்டுத் தோட்டத்தில்” இடம்பிடித்திருக்கிறது. அதோடு, சிறந்த அனைத்துலக முழுநீளத் திரைப்படப் பிரிவில் போட்டியிட்டு விருதை வெல்லும் வாய்ப்பும் இருக்கின்றது.
திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே திரைப்பட விழாக்களில் தேர்வு பெற்று விருதுகளையும் வெல்வது அண்மைய காலமாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், “என் வீட்டுத் தோட்டத்தில்” அனைத்துலக திரைப்பட விழாவில் முதன் முதலாக திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வெளியான மலேசியத் தமிழ்த் திரைப்படங்களில் ‘மறவன்’, ‘ஜகாட்’ ஆகிய இரண்டும் அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் இடம்பெற்று விருதுகளைக் வென்றுள்ள நிலையில், அடுத்ததாக அப்படி ஒரு உலக அங்கீகாரத்தை நோக்கிச் செல்கிறது, ‘என் வீட்டுத் தோட்டத்தில்’.
வாழ்த்துகள் இயக்குநர் கார்த்திக் ஷாமலன்…