Home கலை உலகம் சரியும் நிழல், கொத்தும் பாம்பு, கொட்டும் மழை: ஒளிப்பதிவாளர் ரவினின் ஓவியங்கள்!

சரியும் நிழல், கொத்தும் பாம்பு, கொட்டும் மழை: ஒளிப்பதிவாளர் ரவினின் ஓவியங்கள்!

1069
0
SHARE
Ad

EVT The Farm 4கோலாலம்பூர் – மலேசியத் திரையரங்குகளில் கடந்த 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்று வரும், ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்படத்தில் எல்லோராலும் பாராட்டப்படும் ஒரு முக்கிய அம்சம் அதன் ஒளிப்பதிவு.

36 கதவுகள் கொண்ட ஒரு வீடு.. அதனைச் சுற்றித் தான் கதை நகர்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படக்கூடாது. ஒரே இடத்தில் காட்சிகள் இருப்பது போலும் தெரியக்கூடாது.

ஹாஸ்டலில் இருந்து கதை மெல்ல நகர்ந்து அந்த திகில் வீட்டுக்குள் வருவதற்கு முன்பு வரை ஒரு வகை வண்ணம், அந்தத் திகில் வீட்டிற்குள் கதையும், கதாநாயகி ஜெயா கணேசனும் நுழைந்தவுடன் ஒரு வண்ணம் என இரு வண்ணங்களில் ஒளிப்பதிவைக் காட்ட வேண்டும்.

#TamilSchoolmychoice

அதோடு, கொடிய விஷமுள்ள பாம்பை வைத்து காட்சிகளைப் பதிவு செய்ய வேண்டும். இத்தனை சவால்களையும் சந்தித்து இறுதியில் கொட்டும் மழையிலும் காட்சிகளைப் பதிவு செய்து மலேசிய ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் வி.ஜி. ரவின் மனோகரன் படம் குறித்துப் பேசிய சில தகவல்கள் இதோ:-

Ravyn

செல்லியல்: படத்தில் கதவுகள், இரத்தம், பாம்பு இத்தனை சவால்களும் வெளிப்படையாகத் தெரிகிறது.. இன்னும் தொழில்நுட்ப ரீதியில் என்ன சவால்களை எதிர்க்கொண்டீர்கள்?

ரவின்: இந்தப் படமே எனக்கு மிகப் பெரிய சவால் தான். காரணம் இது என்னுடைய முதல் திரைப்படம். இதற்கு முன்பு நான் செய்தவைகள் அனைத்தும் திரைப்படங்கள் கிடையாது. குறும்படங்கள், மியூசிக் வீடியோ போன்றவை தான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு வேலை செய்யும் போது அதை விட பொறுப்பு கூடியது. அதனால் அதை மிகவும் கவனமாகக் கையாண்டேன்.

செல்லியல்: குறும்படங்களில் பணியாற்றியதற்கும், திரைப்படத்தில் பணியாற்றியதற்கும் என்ன வித்தியாசம் இருந்தது?

ரவின்: மக்கள் யூடியூப்பில் பார்ப்பதற்கும், பெரிய திரையில் பார்ப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. யூடியூப்பில் சின்ன நுணுக்கமான விசயங்கள் ஒருவேளை கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் பெரிய திரையில் அப்படியல்ல எங்காவது மூலையில் ஒரு சின்ன தவறு இருந்தாலும் அது அப்பட்டமாகத் தெரிந்துவிடும்.

EVT 7அதனால் ரசிகர்களின் பார்வையில் சின்னச் சின்ன அசைவுகளைக் கூட மிகவும் அழகாகவும், தத்ரூபமாகவும் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காக மிகவும் பார்த்துப் பார்த்து செய்த போது நிறைய நெருக்கடிகளைச் சந்தித்தேன். படப்பிடிப்பில் எந்தத் தவறும் வந்துவிடக் கூடாது என்று என்னையே நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பேன்.

செல்லியல்: படத்தில் நடித்திருக்கும் பாம்பு பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்..சரி.. சண்டைக் காட்சிகள்,அதிலும் குறிப்பாக மழைக் காட்சிகள் படம்பிடிக்கும் போது எப்படி இருந்தது?

ரவின்: கொட்டும் மழையில் அந்தக் காட்சியைப் பதிவு செய்திருப்போம். செயற்கை மழை தான் என்றாலும், இரவு நேரம் என்பதால் அது மிகவும் சவாலாக இருந்தது. நாங்கள் பயன்படுத்தியது 5டி கேமரா என்பதால், அதனை எளிதாக கையில் வைத்து அந்தக் காட்சியைப் பதிவு செய்ய முடிந்தது. அதேநேரத்தில் அதுவே பயமாகவும் இருந்தது. எங்களுக்கு இருந்த ஒரே கேமரா அது தான். அதிலும் தண்ணீர் எதுவும் பட்டால், எல்லாம் வீணாகப் போயிருக்கும்.

EVT The Farm 1எனவே, மழை ஒருபக்கம் பெய்து கொண்டிருக்கும், நனைந்து கொண்டே நடிகர்கள் நடித்துக் கொண்டிருப்பார்கள், நாங்கள் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருப்போம். கேமரா நனையாமல் ஒருவர் குடை பிடித்துக் கொண்டிருப்பார். இரவு 9 மணிக்கு ஆரம்பித்து காலை 5 மணிக்கு படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

செல்லியல்: இயக்குநர் கார்த்திக் ஷாமலன் ஒளிப்பதிவு பின்புலம் கொண்டவர். அவருடன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் போது எப்படி உணர்ந்தீர்கள்?

ரவின்: அவருடன் பணியாற்றுவது மிகவும் உதவியாக இருக்கும். காரணம் ஒரு காட்சியை வைக்கும் போது அது சரியாக இருக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு உடனே தெரிந்துவிடும். சரி என்றால் அமைதியாக இருந்துவிடுவார். இல்லை என்றால் அதை திருத்துவார். ஒரு வழிகாட்டி உடன் இருந்து உதவுவது போல் இருந்தது அவருடன் பணியாற்றிய அனுபவம் என்கிறார் ரவின்.

லிம்காக்விங் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவரான ரவின் மனோகரன் தற்போது கார்பரேட் நிறுவனங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

EVT The Farm 5படத்தில் காவல்துறைக்கும், குண்டர் கும்பலுக்கும் இடையில் ஒரு சண்டைக் காட்சி வரும். அதன் முடிவில் ஒரு சம்பவம் நடக்கும். இருவர் அப்படியே சரிந்து விழுவார்கள்..

இந்தக் காட்சி, அப்படியே படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் கோரமாக இருந்திருக்கும் சென்சாரில் வெட்டப்பட்டிருக்கும்.

ஆனால், நுட்பமாக அதனை சுவற்றில் தெரியும் நிழல் மூலம் பதிவு செய்து, கோரக்காட்சியையும் கலையாக ரசிக்க வைத்திருப்பார் ரவின். அக்காட்சி தணிக்கையில் தப்பித்ததோடு, ரவினின் ஒளிப்பதிவுத் திறமைக்கு ஒரு தக்க சான்றாக அமைகிறது.

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ கடந்த ஒரு வாரமாக மலேசியத் திரையரங்குகளில் மலேசிய ரசிகர்களின் ஆதரவோடு ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

-ஃபீனிக்ஸ்தாசன்