Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘ஆண்டவன் கட்டளை’ – எதார்த்தமான கதை! ரசிக்க வைக்கும் காட்சியமைப்புகள்!

திரைவிமர்சனம்: ‘ஆண்டவன் கட்டளை’ – எதார்த்தமான கதை! ரசிக்க வைக்கும் காட்சியமைப்புகள்!

826
0
SHARE
Ad

aandavan-kattalai-movie-stills-16

கோலாலம்பூர் – காதலாகட்டும், கருத்தாகட்டும், அதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப எதார்த்தமான திரைக்கதையமைப்பின் மூலம் சொன்னால், நிச்சயமாக வரவேற்பு கிடைக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் படம் தான், ‘ஆண்டவன் கட்டளை’.

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ படத்திற்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மூன்றாவது படம். என்றாலும் படத்தில் கதை என்ற இடத்தில் அருள் செழியன், எம்.மணிகண்டன், அருண்சரன் என மூன்று பெயர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

மதுரைக்குப் பக்கத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காந்தி (விஜய்சேதுபதி), பாண்டி (யோகிபாபு). காந்தி தனது சொந்த அக்கா கணவர் உட்பட ஊரில் பலரிடம் கடன் வாங்கி, அதில் சிக்கித் தவிக்கிறார்.

அந்த ஊரிலேயே வெளிநாடு போய் நன்றாக சம்பாதித்து கிராமத்திற்குத் திரும்பியுள்ள நமோ நாராயணின் ஆலோசனையின் படி, இருவரும், பணம் சம்பாதிப்பதற்காக லண்டன் போக வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வருகிறார்கள்.

சென்னையில் வீடு தேடி அலைவது ஒருபுறம் இருக்க, போலி ஏஜண்ட் ஒருவரிடம் சிக்கிய அவர்கள், லண்டன் விசா எடுக்க இந்திய பாஸ்போர்ட் உட்பட ஆவணங்களில் பல குளறுபடிகளைச் செய்ய ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் விசா அதிகாரியிடம் காந்தி சொல்லும் ஒரு பொய்யால், அவரது விசா நிராகரிக்கப்பட்டுவிட, பாண்டிக்கு மட்டும் விசா கிடைத்து லண்டன் போகிறார்.

காந்தி வேறு வழியில்லாமல் சென்னையில் நாடக சபா நடத்தும் நாசரிடம் கணக்காளராக வேலைக்குச் சேருகிறார். அங்கும் ஒரு சிக்கல் வருகிறது. பாஸ்போர்ட்டில் தனக்குத் திருமணமாகிவிட்டதாக போலியாக அவர் குறிப்பிட்டிருந்த கார்மேகக்குழலி என்ற பெயரால் வருகிறது அந்த சிக்கல்.

பாஸ்போர்ட்டில் போலியாக இருக்கும் கார்மேகக்குழலி என்ற பெயரை நீக்கப் போராடும் விஜய்சேதுபதி எதிர்கொள்ளும் சிக்கல்களும், அவரால் நிஜக் கார்மேகக்குழலியான ரித்திகா சிங்கிற்கு ஏற்படும் பிரச்சினைகளும், லண்டன் போன யோகிபாபுவுக்கு ஏற்படும் விபரீதங்களும் தான் படத்தின் சுவாரசியம்.

நடிப்பு

aandavan-kattalai-movie-stills-8

காந்தியாக விஜய்சேதுபதி அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். “எப்படியாவது லண்டன் போயிருவேன் க்கா” என்று தனது அக்காவை சமாதானப்படுத்துவது தொடங்கி, விசா அதிகாரியிடம் பணிவது, இலங்கை நண்பனுக்கு ஆறுதல் கூறுவது, ரித்திகாவிடம் ஊமையாக நடிப்பது என காட்சிக்குக் காட்சி கைதட்டல் பெறுகிறார்.

பாண்டியாக வரும் யோகிபாபுவின் இருப்பு படத்தில் கலகலப்புக்கு கேரண்டி. “ஏம்பா காந்தி.. வெள்ளக்காரன் இவ்வளவு நல்லவனா இருக்கான்.. அப்பறம் ஏம்பா நாட்டை விட்டுத் தொரத்துணோம்”, “சார்.. தமன்னா பாண்டின்னு என் பொண்டாட்டி பேரு இருக்குற எடத்துல போட்டுக்கங்க” இப்படியாக யோகிபாபு பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் மக்கள் வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். யோகிபாபுவின் உடல்மொழியும், முகபாவணைகளும் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு மிகச் சிறப்பாகப் பொருந்தியுள்ளது.

aandavan-kattalai-movie-stills-9

கார்மேகக் குழலியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். படத்தில் அவருக்குக் குறைவான காட்சிகள் தான். ஆனால் அவரது கதாப்பாத்திரத்தை வடிவமைத்துள்ள விதமும், நடிப்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள இடமும் மிகச் சிறப்பு. ‘இறுதிச்சுற்று’ என்ற மாபெரும் வெற்றியடைந்த ஒரு படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரம் ஏற்றிருந்த அவரை, இப்படத்தில் மணிகண்டன் கையாண்டிருக்கும் விதத்திற்குப் பாராட்டுகள்.

அதற்கு ஏற்ப ரித்திகாவும் இப்படத்தில் தனது அழகான நடிப்பால் கவர்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதியிடம் அவர் காட்டும் புன்சிரிப்புடன் கூடிய முகபாவனை பெரிதும் பேசப்படும்.

இவர்கள் தவிர, படத்தில் சிவஞானம் அரவிந்தன் என்பவர் இலங்கைத் தமிழராக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது மனைவி, பிள்ளைகளைத் தேடும் அந்த வலியை மிக உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், படத்தில், நாசர், சிங்கம்புலி, பூஜா தேவாரியா, ஏ.வெங்கடேஸ் எனப் பலரும் தங்களது பங்களிப்பை மிக அழகாக செய்திருக்கின்றனர். இவர்களோடு, விசாரணை அதிகாரியாக வரும் மலையாள நடிகரின் நடிப்பு மிரட்டல்.

திரைக்கதை

aandavan-kattalai-movie-17

படத்தின் பலமே திரைக்கதையமைப்பு தான். எந்தெந்த காட்சிகள் விளக்கமாக இருக்க வேண்டும். எந்தெந்த காட்சிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கும் இயக்குநர். மக்களின் ரசனையை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

உதாரணமாக, சென்னையில் வீடு தேடி அலைவதற்கென்றே சுமார் 15 நிமிடக் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். எப்படியும்  10 வீடாவது ஏறி இறங்குவது போல் காட்டுகிறார்கள். ஆனால் அக்காட்சிகள் படம் பார்க்கும் நமக்கு சலிப்பைத் தரவேயில்லை. காரணம், அங்கு நடைமுறை வாழ்க்கையின் எதார்த்தம் நிறைந்து காணப்படுகின்றது. ஒரு காட்சியில், “யோவ் நாங்கெல்லாம் ஊர்ல ஏக்கர் கணக்குல நிலத்தையும், வீட்டையும் வச்சிக்கிட்டு இங்கு வந்து தங்குறதுக்கு ஒரு இடம் தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்கோம்” என்று விஜய்சேதுபதி சொல்வது, கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் பெரும்பாலானோரின் குரல்.

அதே போல், நீதிமன்றக் காட்சிகளில் விவாகரத்து செய்வதற்காக வரிசைக் கட்டிக் காத்திருக்கும் மக்கள், பாஸ்போர்ட் அலுவலகங்களில் வாசலிலேயே வழிமறித்து நிற்கும் ஏஜண்டுகள், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் தமிழ் பேச முடியாமல் தவிக்கும் நிலை, அவர்கள் பிடிபட்டால் அவர்கள் சித்தரிக்கப்படும் விதம் என அனைத்திலுமே எதார்த்தங்களை பதித்திருப்பது தான் இப்படத்தின் மிகப் பெரிய பலம்.

என்றாலும், எந்த பாஸ்போர்ட் ஆபிசில் உயரதிகாரியின் இருக்கை பொதுமக்கள் எளிதில் செல்லும் படியாக உள்ளது? அதோடு, பாஸ்போர்ட் அதிகாரி என்னவோ மாணவனின் ஹோம்வொர்க் நோட்டில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பது போல், விஜய்சேதுபதிக்கு பச்சை மையில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம்.. நம்பமுடியவில்லை.

ஒளிப்பதிவு, இசை

aandavan-kattalai-new-1ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு, சென்னை வீதிகள், சந்துகள், சின்னச் சின்ன வீடுகள், நீதிமன்றங்கள் என எதிலுமே சினிமாத் தனம் இன்றி, நிஜத்தில் பார்ப்பது போல் காட்டியிருக்கிறது. அதுவே படத்தை மிக அழகாகக் காட்டுகின்றது.

விஜய்சேதுபதி போனில் பேசுவது போன்ற ஒரு காட்சியில், தவறுதலாக அதில் போன்கேமரா இயங்கிய நிலையில் இருப்பதும், அதை படத்தொகுப்பில் மறைக்க பல முயற்சிகள் செய்திருப்பதும் அப்பட்டமாகத் தெரிகின்றது.

கே-வின் பின்னணி இசை படத்திற்குப் பக்கபலம் சேர்த்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ரசிக்கும் ரகம். “வாழ்க்கை ஒரு ஒட்டகம்” என்ற பாடல் வரிகள் மனதில் நின்றுவிடுகின்றது.

மொத்தத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ – எதார்த்தமான கதை! ரசிக்கை வைக்கும் காட்சியமைப்புகள்! அருமையான படம்! விடுமுறை நாளில் குடும்பத்தோடு திரையரங்கு சென்று பார்த்து ரசித்து வர ஏதுவான படம்.

-ஃபீனிக்ஸ்தாசன்