Home Featured வணிகம் கைது ஆணை: சட்ட சிக்கலில் இருந்து ஆனந்த கிருஷ்ணன் மீள முடியுமா?

கைது ஆணை: சட்ட சிக்கலில் இருந்து ஆனந்த கிருஷ்ணன் மீள முடியுமா?

953
0
SHARE
Ad

ananda-krishnan

புதுடில்லி – மலேசியாவிலும், உலகளாவிய நிலையிலும் மிக நீண்டகால வணிகப் பின்னணியைக் கொண்ட 78 வயதான மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணன், இன்று தன் வாழ்நாளில் இதுவரை கண்டிராத சட்ட சிக்கலுடன் கூடிய சவாலைச் சந்தித்திருக்கின்றார்.

இந்தியாவில் 2-ஜி தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை அவருக்கும், அவரது இரண்டாம் நிலை நிர்வாகி ரால்ப் மார்ஷலுக்கும் எதிராக கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

நடந்து வரும் வழக்கு விவகாரங்கள் எதிலும் ஆனந்த கிருஷ்ணன் நேரடியாக ஊழல் புரிந்தார் என்றோ, சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கோ போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், இந்தியாவில் அரங்கேறி வரும் ஒரு மாபெரும் அரசியல் வலைப் பின்னலில் – அதைத் தொடர்ந்த ஒரு மிகப் பெரிய ஊழல் விவகாரத்தில், மிகுந்த வணிக அனுபவம் வாய்ந்த ஆனந்த கிருஷ்ணனும் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டுள்ளார் என்றே தோன்றுகின்றது.

காரணம் உலகின் பல நாடுகளில் விரிவடைந்துள்ள அவரது வணிக ஆதிக்கத்தில் எங்குமே இதுவரை இதுபோன்ற பிரச்சனைகள் அவருக்கு எழுந்ததில்லை. தனிப்பட்ட நிறுவனங்களுடன் அவருக்கு வழக்கு விவகாரங்கள் இருந்திருக்கலாமே தவிர, அரசாங்கங்களுடனோ, காவல் துறை, புலனாய்வுத் துறை ஆகியவற்றுக்கு எதிராகவோ அவருக்கு பிரச்சனைகள் இதுவரை எழுந்ததில்லை.

அந்த அளவுக்கு தனது வணிக விவகாரங்களை முறையாகவும், சட்டபூர்வமாகவும், அவர் கையாண்டு வந்திருக்கின்றார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

சட்ட சிக்கலில் ஆனந்த கிருஷ்ணன் மீள முடியுமா?

aircel-maxis-deal-logoஇந்தியாவில் தனக்கும் தான் சார்ந்துள்ள வணிக முதலீடுகளுக்கும் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்களில் இருந்து மீள்வதற்கான முதல் கட்ட ஆயத்தமாக தனது ஏர்செல் நிறுவனத்தை, இந்திய அளவில் பலம் வாய்ந்த – அரசியல் செல்வாக்கு மிகுந்த – அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் இணைத்திருக்கின்றார் ஆனந்த கிருஷ்ணன்.

இதன்மூலம், இந்தியாவில் தனது வணிக முதலீடுகளில் இருந்து கட்டம் கட்டமாக ஆனந்த கிருஷ்ணன் பின்வாங்கத் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய விவகாரத்திலும், தயாநிதி மாறன்-கலாநிதி மாறன் (மாறன் சகோதரர்கள்) மீதான வழக்கிலும்  மிகவும் சிக்கலான ஒரு பின்னலில் ஆனந்த கிருஷ்ணனும் சிக்கிக் கொண்டு விட்டார்.

மாறன் சகோதரர்கள், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திமுக அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி போன்ற முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும்  2-ஜி ஊழல் விவகாரங்களை விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு ஆனந்த கிருஷ்ணன் இதுவரை தனது ஒத்துழைப்பை வழங்காதது ஏன் என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கின்றது.

ralph-marshallஇதைக் குறிப்பிட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சைனி, ஆனந்த கிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் (படம்) இருவரையும் விசாரிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மலேசிய அரசாங்கத்தின் சார்பில் போதிய ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்பதால், இனி இந்த விவகாரத்தை இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையின் மூலம் அணுக வேண்டியிருக்கின்றது என்றும் அதற்காக கைது ஆணை பிறப்பிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைகளில் இதுவரை ஆனந்த கிருஷ்ணன் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதித்து வழக்காடவில்லை என்பதும் கவனிக்கத்தக்க ஓர் அம்சம்.

எனவே, முதல் கட்டமாக, தன் மீது விடுக்கப்பட்டிருக்கும் கைது ஆணையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்ஷலின் வழக்கறிஞர்கள் மனு சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பு நீதிமன்ற விசாரணை எதிர்வரும் அக்டோபர் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு முன்பாக இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்படலாம்.

இந்திய அரசாங்கத்தின் கைது ஆணை இண்டர்போல் அமைப்பில் பதிவு செய்யப்பட்டால், பல நாடுகளில் வணிக நிறுவனங்களைக் கொண்டுள்ள ஆனந்த கிருஷ்ணன், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதில் தடைகள் ஏற்படக் கூடும்.

இந்திய அரசாங்கத்தின் கைது ஆணை தன்மீது விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இனியும் அவர் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் சட்ட ரீதியாக அதனை முறியடிக்க முனைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கைது ஆணையின் காரணமாக, இந்திய அரசாங்கத்துடனான ஒரு நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு ஆனந்த கிருஷ்ணன் இனி தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகின்றது.

அடுத்த சில நாட்களில் ஆனந்தகிருஷ்ணன்-ரால்ப் மார்ஷல் இருவரின் சட்ட வியூகங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் போது, அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான நிலைப்பாடும் தெரியவரும்.

-இரா.முத்தரசன்