சென்னை – அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்படுவார் என்ற தகவல்களில் உண்மையில்லை என அந்த மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
“ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி காய்ச்சல் காரணமாகவும், உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாகவும் எங்களின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக நாங்கள் சிகிச்சை அளித்தோம். மறுநாளே அவரது காய்ச்சல் குணமாகியது. அப்போது முதல் வழக்கமான உணவுகளை அவர் உட்கொண்டு வருகின்றார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்” எனவும் அப்போல்லோ மருத்துவமனை வட்டாரம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கை அஇஅதிமுக கட்சியின் வலைத் தளங்களிலும் இன்று வெளியிடப்பட்டது.
“இதற்கிடையில், தமிழக முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்படுவார் என சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டு வரும் தகவல்களில் உண்மையில்லை. இந்தத் தகவல்களில் உண்மையில்லை என்பதோடு அவை அடிப்படையற்றவை. முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்படுவதற்கான எந்தவிதத் தேவையும் தற்போது இல்லை” என்றும் அப்போல்லோ மருத்துவமனையின் அறிக்கை மேலும் தெரிவித்தது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்லமுறையில் ஒத்துழைப்பு தந்து வருகின்றார் என்றும் அவரது உடல்நலமும் மேலும் மேம்பட்டுள்ளது என்றும் அப்போல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.
இருப்பினும், முதல்வருக்கு மேலும் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகின்றது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பதால் அவர் இன்னும் சில நாட்களுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து இல்லம் திரும்புவார் என்றும் அதன் பின்னர் அவர் தனது அதிகாரபூர்வ பணிகளைத் தொடரலாம் என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.