கோலாலம்பூர் – மஇகாவுக்கு மீண்டும் பழனிவேல் அணியினர் திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் டத்தோ எஸ்.சோதிநாதன், தனது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு அறிவித்திருக்கும் காலக்கெடுவான செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு, இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 23ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சோதிநாதன் இடையில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, பழனிவேல் அணியினர் மீண்டும் மஇகாவுக்குள் திரும்புவது உறுதியாகிவிட்டது என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இருதரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு என்ன என்பது குறித்த விவரங்கள் எதுவும் இரண்டு தரப்புகளில் இருந்தும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
நஜிப்-சோதிநாதன் சந்திப்பில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அந்த சந்திப்புக்கு சுப்ரா முழு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், ஏற்கனவே பிரதமருடன் அவர் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்தான் நஜிப்-சோதிநாதன் பேச்சு வார்த்தையின் முடிவுகளும் எடுக்கப்பட்டன என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஇகா-சங்கப் பதிவக வழக்குகள் முடிவுக்கு வருமா?
மஇகாவில் சுப்ரா-சோதிநாதன் இடையில் ஏற்பட்டுள்ள சுமுக உடன்பாடுகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நடந்து வரும் மஇகா மறுதேர்தல்கள்-சங்கப் பதிவகம் தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுப்ராவுக்கும், சோதிநாதனுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, அனைத்து தரப்புகளும் நீதிமன்ற வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். அந்த வகையில் நீதிமன்ற வழக்கு தொடுத்து கையெழுத்திட்டிருக்கும் அனைவரும் தங்களின் வழக்குகளை மீட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த முடிவுகளும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் பழனிவேல் தரப்பின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்த சோதிநாதன் அவர்களிடம் தனது பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சங்களை விளக்கியதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும், அந்த விவரங்கள் என்ன என்பது குறித்த ஆரூடங்களே வெளியிடப்பட்டு வருகின்றனவே தவிர, யாரும் இதுகுறித்து வாய்திறக்கத் தயாராக இல்லை.
பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைவரும் மௌனம் காத்து, அமைதியான முறையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்ற முடிவில் செயல்பட்டு வருகின்றனர்.
விரைவில் சுப்ரா-சோதிநாதன் இடையிலான உடன்பாடுகள் குறித்த முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனிவேல் அணியினரின் முந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பு (கோப்புப் படம்)
முதல் கட்டமாக பழனிவேல் அணியினரின் கிளைகளுக்கான மறு வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும், இதற்கிடையில் பழனிவேல் தரப்பின் சில தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களாகவும், மாநில தொடர்புக் குழு பொறுப்புகளுக்கும் நியமிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்குள் ஒரு முடிவுக்கு வரும் என்றும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் நாள் வரப்போகும் தீபாவளித் திருநாளுக்கு முன்பாக அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து விடும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு நிகழும் பட்சத்தில் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டங்கள் மஇகாவின் ஒற்றுமைத் தீபாவளியாக – அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து மஇகாவின் திறந்த இல்ல உபசரிப்பைபைக் கொண்டாடும் – தீபாவளியாகத் திகழலாம்!
-இரா.முத்தரசன்