கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘ரெமோ’ உண்மையிலேயே கூற வேண்டுமானால், சற்று ஏமாற்றம்தான்! காரணம், அவ்வை சண்முகியில் கமல்ஹாசன் பெண் வேடம் தரிக்கும் கதைப் பகுதிகளையும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும் நயன்தாராவின் மேல் தனுஷ் காதல் கொள்ளும் சம்பவங்களையும் சரியான அளவில் கலவை செய்து, கூடவே கொஞ்சம் மாற்றங்களோடு கூடிய மசாலாவைச் சேர்த்துத்து திரைக்கதை அமைத்திருக்கின்றார், அறிமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்.
அவ்வை சண்முகியே ஆங்கிலப் படத் தழுவல் என்பதும், யாரடி நீ மோகினி தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ தழுவல் என்பதும் வேறு விஷயம்.
இருந்தாலும், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்களின் தனித்துவமிக்க நடிப்பாலும், அங்க அசைவுகள், உடல் மொழியாலும் படத்தைத் தூக்கி நிறுத்துவதோடு, இறுதிவரை நாம் படத்தை சுவாரசியமாக பார்ப்பதற்கு காரணமாகவும் அமைந்திருக்கின்றார்கள்.
திரைக்கதை-கதை
நூற்றுக்கணக்கான படங்களில் பார்த்தது போல், சாலையோரம் நடந்து செல்லும் அழகான பெண்ணைப் பார்த்துக் காதல் கொள்கின்றான் கதாநாயகன், சிவா. வழக்கமான தமிழ்ப்படக் கதாநாயகனைப் போல் அவ்வளவாகப் படிக்காத ஊர் சுற்றிக் கொண்டிருக்கும், அப்பாவை இழந்த, அம்மாவின் பிள்ளை. இடையிடையே நாடக நடிப்பு ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு அலைகிறார். நாயகனுடன் கூடவே சுற்றும் நகைச்சுவைக்கான அல்லக்கை ஒருவர் – சதீஷ்!
டாக்டரான நாயகி காவியாவைத் தேடி சிவா, அவரது வீட்டுக்குச் செல்ல அங்கே அன்றுதான் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் என்பதை அறிந்து இடிந்து போகின்றார்.
இடையில், நடிக்கும் வாய்ப்புக்காக பெண் நர்ஸ் வேடம் போடுகின்றார் சிவகார்த்திகேயன். பெயரை ரெஜினா மோத்வானி என்று பொய் கூற, கீர்த்தி சுரேஷ் அதனை சுருக்கி “ரெமோ” ஆக்குகின்றார். அப்பாடா! படத்திற்கு தலைப்பைப் பொருத்தியாகிவிட்டது!
திருமண நிச்சயதார்த்தம்தானே முடிந்திருக்கின்றது, எனது காதல் கைகூட முயற்சி செய்கின்றேன் என சிவகார்த்திகேயன் கோதாவில் இறங்க, அவர் காதல் கைகூடியதா, கீர்த்தியின் மனதை அவரால் மாற்ற முடிந்ததா, பெண்வேடம் குறித்த உண்மைகள் கலைந்ததா – என்பதைக் கூறுவதுதான் ‘ரெமோ’வின் பின்பாதிக் கதை.
கதை-திரைக்கதையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. முன்பே கூறியது போல், அவ்வை சண்முகி, யாரடி நீ மோகினி படங்களை அப்பட்டமாக நினைவுபடுத்தும் வகையில் கதையையும் சம்பவங்களையும், நோகாமல், அமைத்துக் கொண்டிருக்கின்றார் இயக்குநர்.
அதிலும், கதாநாயகியைத் திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளை டாக்டராக இருந்தாலும், மோசமான குணங்களைக் கொண்டவன் எனக் காட்டியிருப்பது, அதரப் பழசு.
படம் முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி தோள்களில்!
படம் முழுவதையும் தூக்கி நிறுத்துவது சிவகார்த்திகேயனும், கீர்த்தி சுரேஷூம்தான். சிவாவின் சேஷ்டைகள், பெண் வேட நடிப்பு, பார்க்கும்படியும், இரசிக்கும்படியும் இருக்க, அழகான உடல்மொழி, சின்ன சின்ன முகச் சுழிப்புகள், நவரசங்களையும் கொண்டுவரும் முகபாவனைகள், என இன்னொரு பக்கம் கீர்த்தி பாஸ் மார்க் வாங்குகின்றார்.
பல இடங்களில் தனக்கே உரிய பாணியில் பெண்களைப் பற்றியும், காதல் பற்றியும் ‘பஞ்ச்’ வசனங்கள் பேசி தியேட்டரை அதிரவைக்கின்றார் சிவகார்த்திகேயன். சண்டைக் காட்சிகளிலும் தூள் பறக்க வைத்திருக்கின்றார்.
எல்லா வகையிலும், விஜய்-அஜித் வரிசைக்கு அடுத்த மாஸ் ஹீரோ இடத்தைப் பிடித்துவிட்டேன் என்பதைத் சொல்லாமல் சொல்லிவிட்டார் சிவகார்த்திகேயன்.
படத்தின் மற்ற பலங்கள்
படத்திற்கு பலம் சேர்க்கும் மற்ற இரண்டு முக்கிய அம்சங்கள் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும். ஒரு சில பாடல்களாலும், பின்னணி இசையாலும் தனது முத்திரையைப் பதித்திருக்கின்றார் அனிருத்.
ஸ்ரீராமின் ஒளிப்பதிவு குறித்து இனியும் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அனுபவம் மிக்க, கண்களை உறுத்தாத, படப்பிடிப்பு. இரவு நேரக் காட்சிகளிலும் தனது நேர்த்தியைக் கொடுத்திருக்கின்றார் ஸ்ரீராம்.
சில இடங்களில் தனது முத்திரையைப் பதிக்கின்றார் இயக்குநர். குறிப்பாக, நர்ஸ் வேடத்தில், பிரசவம் ஒன்றைப் பக்கத்தில் இருந்து பார்க்க நேரிடும் சிவகார்த்திகேயன், அடுத்த காட்சியில் தூங்கிக் கொண்டிருக்கும் அம்மாவின் தியாகத்தை நினைவுகூரும் வண்ணம் அவரை வணங்குவது பொருத்தமான இணைப்பு.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமுடன் படக் குழுவினர் – இடது புறம் நீல நிற சட்டையுடன் இருப்பவர் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்…
படத்தின் மற்றொரு சிறப்பு முக ஒப்பனை. பெண்வேடத்தில் அப்படியே பொருந்திப் போகின்றார் சிவகார்த்திகேயன். பெண்வேடத்திலேயே சண்டைக் காட்சிகளிலும் கலக்கும் அளவுக்கு கலையாத முக ஒப்பனை அசத்தல்.
நடிப்பில், சிவகார்த்திகேயனுக்கு இணையாக வரும் சதீஷைவிட, யோகி பாபு கைத்தட்டலைப் பெறுகின்றார். அண்மையில் வெளிவந்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு இணையாக வந்து பரவலான பாராட்டுக்களைப் பெற்ற யோகி பாபு இதிலும் நர்ஸ் சிவகார்த்திகேயனை விரட்டி விரட்டிக் காதலிப்பவராக நம்மை சிரிக்க வைக்கின்றார்.
வழக்கமாக அம்மாவுக்கே உரிய அத்தனை அம்சங்களுடன் கவர்கின்றார் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன்.
படத்தின் மற்றொரு பொருத்தமான இணைப்பு இயக்குநராகவே வரும் கே.எஸ்.ரவிக்குமார். அவ்வை சண்முகி இரண்டாம் பாகம் எடுக்கின்றேன் என்று அவர் நடத்தும் நடிகர் தேர்வு காட்சிகளும், அவரது இயல்பான, நகைச்சுவை கலந்த நடிப்பும் கலகலக்க வைக்கின்றன.
படத்தின் பலவீனங்கள்
கதையும், திரைக்கதையும் படத்தின் மிகப் பெரிய பலவீனங்கள். மற்றொரு பலவீனம் இடைவேளைக்குப் பின்னர் முழுப்படமும் சிவகார்த்திகேயன், கீர்த்தியை மட்டும் சுற்றிச் சுற்றி வருவதுதான். எந்தவித திருப்பங்களும் இல்லாமல், அவர்கள் இருவரின் சம்பவங்களை மட்டும் வைத்து திரைக்கதை செல்வது சற்றே போரடிக்க வைக்கின்றது.
இருந்தாலும், இந்த பலவீனங்களை எல்லாம் சமாளிக்கும் விதத்தில் சிவகார்த்திகேயனும், கீர்த்தியும் படத்தை தூக்கி நிறுத்துகின்றார்கள். அவர்களுக்காகவும், வாய்விட்டு சிரிப்பதற்காகவும் ஒருமுறை தயங்காமல் பார்த்து வைக்கலாம்!
-இரா.முத்தரசன்