பெட்டாலிங் ஜெயா – கடந்த திங்கட்கிழமை அக்டோபர் 10-ஆம் தேதி மறைந்த மலேசிய நாட்டின் மூத்த எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இறுதிச் சடங்குகள் நேற்று துயரம் சூழ நடந்து முடிந்தன.
இந்நிலையில், அன்னார் குறித்த நினைவுகளையும், சம்பவங்களையும், அவருடைய இலக்கியப் பங்களிப்பு குறித்த தகவல்களையும் பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மன்னர் மன்னன் மருதை, ரெ.கா. குறித்த சில சம்பவங்களை செல்லியலிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார்.
“நான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த போது ரெ.கா.வின் பல எழுத்துப் படிவங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அவரின் ஒரு சில நாவல்கள் கல்லூரியின் பாடத் திட்டத்திலேயே இடம்பெறுவதற்கும் வழி செய்தேன்” என்று நினைவு கூர்ந்த மன்னர் மன்னன் (படம்), ரெ.கா.வின் யாரும் அறியாத இன்னொரு முகத்தையும் ஒரு சம்பவத்தின் மூலம் விவரித்தார்.
“கடந்த ஆண்டு, அவர் தனது 75-வது பிறந்த நாளை மிக எளிமையாக பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அகத்தியர் இல்லத்தில் கொண்டாடினார். அப்போது ஏனோ தெரியவில்லை என்னையும் அழைத்திருந்தார். அங்கு சென்றபோது அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் தவிர வேறு யாரும் அந்த நிகழ்ச்சியில் இருக்கவில்லை. நான் மட்டும்தான் இருந்தேன். அங்கிருந்த ஆதரவற்ற குழந்தைகளுடனும், மற்றவர்களுடன் அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். அதோடு, அந்த அகத்தியர் இல்லத்திற்கு தனது சொந்த நன்கொடையாக 10,000 ரிங்கிட் வழங்கினார். என்னிடம், அந்த நன்கொடை குறித்து யாரிடமும் கூறக் கூடாது என வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்” என்றார் மன்னர் மன்னன்.
“அதுவரை அவரது இலக்கியப் பணிகள் பற்றி மட்டுமே அறிந்திருந்த நான், அப்போதுதான் முதன் முறையாக யாருக்கும் தெரியாமல், விளம்பரம் தேடாமல், அறப்பணி செய்ய விரும்பிய அவரது இன்னொரு முகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இதுவரையில் நானும் அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, யாரிடமும் அவரது இந்த நற்குணம் குறித்து கூறாமல் இருந்தேன். ஆனால், அவரது மரணத்திற்குப் பின்னரும் அவர் செய்த நற்பணியைப் பற்றிக் கூறாமல் இருக்க மனம் ஒப்பவில்லை” என உருக்கத்துடன் கூறினார் மன்னர் மன்னன்.
ரெ.கா. மறைவு குறித்து மலேசியாவிலிருந்தும், மற்ற நாடுகளில் இருந்தும் பல்வேறு தலைவர்களும், இலக்கியவாதிகளும், தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.