கோலாலம்பூர் – மனித மனங்களைப் பண்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதில் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. இந்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஐந்தாம் படிவத்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் ஆறு ஆண்டுகள் பயின்று தமிழ்க்கல்வி பெற்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைக் கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடம் தொடர்பான கற்றல் கற்பித்தலில் உள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு மாணவருக்கும் ஆசிரியருக்கும் உதவும் நோக்கில் இலக்கிய வழிகாட்டியான ‘தேர்வுக் களஞ்சியம்’ நூலை மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) இவ்வாண்டு வெளியிட்டது.
ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவை நிறைந்த பயனை நல்கியதாக நாடு முழுவதுமிருந்து வந்த எதிர்வினை மிகுந்த மனநிறைவைத் தந்தது. நம் மாணவர்களுக்குத் தொடர்ந்து உதவும் நோக்கில் மாதிரித் தேர்வுத் தாள்களும் முழுமையான விடைகளும் அடங்கிய நூல் வெளிவரவுள்ளது.
தேர்வில் சிறந்த தேர்ச்சிக்கு விடாமுயற்சியும் தொடர்ப் பயிற்சியும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மற்றத் தேர்வுப் பாடங்களில் எண்ணிறந்த பயிற்சி நூல்களும் மாதிரித் தேர்வுத் தாள்களும் உள்ளன. ஆனால், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவு. அந்தக் குறைநீக்க இந்த நூல் நிச்சயம் உதவும்.
இதனை இலக்கிய ஆசிரியர் ந.பச்சைபாலன் எழுதியுள்ளார். தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளதால் இந்நூல் மாணவரையும் ஆசிரியரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
இந்நூலில், ஆறு மாதிரித் தேர்வுத் தாள்களும் அவற்றுக்கான முழுமையான விடைகளும் உள்ளன. மேலும், கூடுதலாக நாடகம், நாவலையொட்டிய சூழல் கேள்விகளும் விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன. கேள்விகளுக்கு விடையளிக்கும் நுணுக்கங்கள் குறித்த விரிவான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
நூல்களைப் பெற விழைவோர் 012 6025450 (ந.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் வழி இந்நூலைப் பெறலாம்.
‘இன்பத் தமிழ் இலக்கியத்தை இணைந்தே வளர்ப்போம்!’
‘இலக்கியம் பண்பாட்டின் வேர்’