கோலாலம்பூர் – பாரம்பரிய சுழற்சி முறை காரணமாக, தனக்கு வந்த மாமன்னர் பதவி வாய்ப்பை மறுத்துள்ளார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார்.
முன்னதாக, நட்பு ஊடகங்களில் பரவிய தகவல் ஒன்றில், மாமன்னர் பதவி ஏற்க சுல்தான் மறுத்ததற்குக் காரணம் அவர் தனது சொந்த மாநிலமான ஜோகூரில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அதனை மறுத்துள்ள சுல்தான், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது குறித்து சுல்தானின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நட்பு ஊடகங்களில் வெளியாகும் கருத்துகளுக்கு மாறாக, ஜோகூர் சுல்தான் தனக்கு வந்த அடுத்த மாமன்னராகப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பை மறுத்ததற்குக் காரணம், சுல்தான்களின் மாநாட்டில் நிறுவப்பட்ட சுழற்சி முறையைத் தீவிரமாகப் பின்பற்றுவது தான்”
“அந்த வகையில், இந்த முறை, கிளந்தான் சுல்தான் தான் அந்த வரிசையில் இருக்கிறார். அவரை அடுத்து பகாங் சுல்தான் இருக்கிறார்”
“எனவே சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் சுழற்சி முறையின் விதிமுறைகளை புரிந்து கொள்வதோடு, அதனை மதிக்கிறார். அதனால் அதனைப் பின்பற்ற விரும்புகிறார்” என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
இதனிடையே, நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில சுல்தான்களின் சிறப்புக் கூட்டத்தில், புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி, 15 -வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது 5 ஆண்டுகள் பதவிக் காலம் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்குகிறது.
அதேவேளையில், பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுதின் ஷா அடுத்த துணை மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.