ஈப்போ – 2 மலைப்பாம்புகள் கொண்ட சேற்றுக் குளத்தில் இறங்கச் சொல்லி, மாணவிகளுக்கு பயிற்சி தந்த கோலகங்சார் பொது தற்காப்புப் படையைச் (Kuala Kangsar Civil Defence Brigade) சேர்ந்த 4 பயிற்சியாளர்களும், 6 துணை பயிற்சியாளர்களும் உடனடியாக தற்காலிகமாக அவர்களின் பொறுப்பிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பயிற்சி குறித்த காணொளி நட்பு ஊடகங்களில் (சோஷியல் மீடியா) பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து கோலகங்சார் பொது தற்காப்பு படையின் உயர் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, மாணவிகள் பயன்படுத்திய சேற்றுக் குளத்தில், பயிற்சியின் ஒரு பகுதி என்று கூறி, இரண்டு மலைப்பாம்புகளை பயிற்சியாளர்கள் உள்ளே விட்டுள்ளனர். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை நடைமுறைகளுக்கு முரணானது என பொது தற்காப்பு படையின் நிர்வாகம் கூறியுள்ளது.
என்ன நடந்தது என்பது குறித்து விசாரிப்போம் எனக் கூறியிருக்கும் பொது தற்காப்புப் படை நிர்வாகம், 2012-இல் இருந்து நடத்தப்படும் இதுபோன்ற பயிற்சிகளின் வரிசையில் இது 32-வது பயிற்சி என்றும், ஆனால் இது போன்று மலைப்பாம்புகள் பயன்படுத்தப்பட்டது இதுதான் முதல் முறை என்றும் கூறியுள்ளனர்.
இந்தக் காணொளி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி இணையத் தளத்தின் சார்பில் யூ டியூப் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய – பார்த்தாலே – பயிற்சியாளர்கள் மீது வெறுப்பையும், ஆத்திதிரத்தையும் வரவழைக்கும் அந்த காணொளியைக் கீழே காணலாம்:-