ஈப்போ – 2 மலைப்பாம்புகள் கொண்ட சேற்றுக் குளத்தில் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக பேராக் துணை காவல்துறைத் தலைமை துணை ஆணையர் ஹஸ்னான் ஹசான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இச்சம்பவத்தைப் படம் பிடித்து நட்பு ஊடகங்களில் பகிர்ந்தவர் என்று ஹஸ்னான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பயிற்சியை அளித்த மலேசியத் தற்காப்புப் படையைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் ஹஸ்னான் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில், இச்சம்பவம் தொடர்பாக ஒரே ஒரு காவல்துறைப் புகார் மட்டுமே தங்களுக்கு வந்துள்ளதாகவும் ஹஸ்னான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளியான செய்தி ஒன்றில், மாணவிகளுக்கு பயிற்சி தந்த கோலகங்சார் பொது தற்காப்புப் படையைச் (Kuala Kangsar Civil Defence Brigade) சேர்ந்த 4 பயிற்சியாளர்களும், 6 துணை பயிற்சியாளர்களும் தற்காலிகமாக அவர்களின் பொறுப்பிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.