ஜார்ஜ் டவுன் – பினாங்கில், டத்தோ கெராமாட் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில், கடந்த ஒரு வாரமாக மிகவும் அச்சுறுத்தல் கொடுத்து வந்த 3 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்றை பாம்புப்பிடி நிபுணர்கள் வெற்றிகரமாக மீட்டனர்.
இது குறித்து ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய குருக்கள் பி.சிவராமன் ஊடகங்களிடம் கூறுகையில், “கடந்த பிப்ரவரி 25-ம் தேதி, இரவு 11 மணியளவில், முதன் முதலாக அப்பாம்பைப் பார்த்தேன். ஏதோ மின்னும் பொருள் போல் இருந்தது உற்று நோக்கினால் அது மலைப்பாம்பு. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அழைத்து உதவி கேட்டேன். என்றாலும் அவர்கள் வருவதற்குள் அது அங்கிருந்து தப்பித்து கூரை மேல் சென்றுவிட்டது” என்று தெரிவித்தார்.
“அதற்கு அடுத்த நாள், சிலர் கூரை மீது ஏறிப் பார்த்தனர். ஆனால் அது அங்கு இல்லை. அதன் பின்னர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில், சிவன் சன்னதியில் நான் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, லிங்கம் அருகில் சத்தம் கேட்டது”
“இந்த முறை உடனடியாக எனது நண்பருக்கு அழைத்து பாம்பு பிடிப்பவரை வரவழைத்தேன். அங்கு வந்த அவர், 20 நிமிடங்கள் தேடிய பிறகு அப்பாம்பைப் பிடித்தார். அவர் பிடித்தது அதே பாம்பு தான். பின்னர் அது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.