Home Featured நாடு இந்தியர் திட்ட வரைவு: நஜிப் அறிவிப்பு தீர்வா? பொதுத் தேர்தல் கண்துடைப்பா?

இந்தியர் திட்ட வரைவு: நஜிப் அறிவிப்பு தீர்வா? பொதுத் தேர்தல் கண்துடைப்பா?

608
0
SHARE
Ad

mic-assembly-2016-leaders-stage

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (16 அக்டோபர் 2016) நடந்து முடிந்த மஇகாவின் 70-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோது இந்தியர்களுக்கான தனிப்பட்ட சிறப்பு திட்ட வரைவு (புளுபிரிண்ட்) எதிர்வரும் ஜனவரியில் வெளியிடப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  அறிவித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய சமுதாயத்தில் பரவலான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது மட்டும் அறிவிப்பு வருவது வரப்போகும் 14-வது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் கண்துடைப்பா இது என்ற கேள்வியும் எழுகின்றது.

#TamilSchoolmychoice

mic-assembly-2016-pm-speechமாநாட்டைத் தொடக்கி வைத்து நஜிப் உரையாற்றுகின்றார்…

காரணம், இதுபோன்ற திட்ட வரைவுகள் வெறும் காகித வடிவில்இருக்குமே தவிர – அதில் காணப்படும் அம்சங்கள் நம்மை பூரித்துப் புளகாங்கிதம் அடைய வைக்குமே தவிர – மற்றபடி அமலாக்கம் – செயலாக்கம் என்று வரும்போது, இந்தியர்களுக்கு பயன்விளையுமா என்பது கேள்விக் குறிதான்!

கடந்த கால கசப்புகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. உதாரணமாக, தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தில் இந்திய குத்தகையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது – மஇகா தலைவர்கள் எந்த அமைச்சில் இருந்தாலும், அந்த அமைச்சின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு எதுவும் செய்ய முடியாமல் போவது போன்ற நடப்பு உண்மைகள் நமக்கு வலியைத்தான் ஏற்படுத்துகின்றன.

அமுலாக்கம் – செயலாக்கம் தேவை

mic-assembly-2016-subraடாக்டர் சுப்ராவின் தலைமையுரை…

இதையேதான், மஇகா மாநாட்டில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் வேறொரு கோணத்தில் வலியுறுத்தியிருக்கின்றார்.

பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு வழங்கி வரும் உதவிகளில், பெரும்பான்மையானவை அவரது சொந்த முயற்சிகளின் காரணமாக, அவர் நம்மீது காட்டும் தனிப்பட்ட அக்கறை காரணமாக, செயல்படுத்தப்பட்டவை என்பதையும் தனது தலைமையுரையில் சுட்டிக்காட்டிய டாக்டர் சுப்ரா, ஆனால், இந்திய சமுதாயத்தைக் குறிவைத்து பிரதமர் மேற்கொண்டு வரும் வாய்ப்புகளும், சலுகைகளும் ஆண்டுக்கொரு முறை வழங்கப்படும் அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல், அரசாங்கத்தின் நிரந்தரக் கொள்கைகளாக நிலைநிறுத்தப்படவேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கின்றார்.

mic-assembly-2016-tengku-adnan

மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மற்றும் சகோதரக்  கட்சிகளின் தலைவர்கள்…

எனவே, ஜனவரியில் வெளிவரப்போகும் திட்ட வரைவு என்பது, அமலாக்கம், செயலாக்கம் குறித்த தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், அல்லது அதில் முன்மொழியப்படும் அம்சங்கள் நிரந்தர அரசாங்கக் கொள்கைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் – அடுத்து வரும் தலைவர்களும் – அரசாங்க அதிகாரிகளும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டால்தான், திட்டவரைவுக்கு பயன் இருக்குமே தவிர,

இல்லாவிட்டால், வெறும் பொதுத் தேர்தல் கண்துடைப்பா – வெற்று காகித வாக்குறுதிகளாக அவை காற்றில் கரைந்து விடும்.

நஜிப் உரையில் முக்கிய அம்சங்கள்.

mic-assembly-2016-leaders-with-pm-stageநஜிப்புடன் கைகோர்க்கும் மஇகா தலைவர்கள்…

மஇகா மாநாட்டில் நஜிப் உரையில் வேறு சில முக்கிய அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

இந்த மாநாடு முக்கியமான ஒரு மாநாடு என்றும் காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற கட்சியின் தலைமைத்துவப் போராட்டம்  இந்த மாநாட்டோடு முடிவுக்கு வந்துள்ளது என்றும் பிரதமர் தனது உரையில் கூறியிருக்கின்றார்.

இதன் மூலம் கட்சியின் பேராளர்கள் டாக்டர் சுப்ராவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் மாநாட்டில் ஒன்று கூடியுள்ளதாக தெரிவித்தார்.

“கட்சி ஒன்றுபட்ட கட்சியாக திகழவேண்டும். இரண்டு பட்ட இல்லம் வீழ்ந்து விடும்” என்றும் பிரதமர் பேராளர்களுக்கு  நினைவு படுத்தினார்.

சிறிய இனமாக இருந்தாலும், இந்தியர்கள் பல்வேறு பிரிவினராகப் பிளவுபட்டு இருக்கிறார்கள் என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

mic-assembly-2016-delegatesமாநாட்டில் திரளாகக் கலந்து கொண்ட பேராளர்கள்…

மஇகா அனைவரையும் இணைத்துக் கொள்ளும் வகையில் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் கட்சியாக மஇகா திகழ வேண்டும் என்றும் பிரதமர் மஇகா தலைமைத்துவத்தைக் கேட்டுக் கொண்டார்.

ஐபிஎப், மக்கள் சக்தி, மலேசிய இந்தியர் ஒற்றுமைக் கட்சி போன்ற மற்ற இந்தியர் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களையும் இணைத்துக் கொள்ள மஇகா முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் நஜிப் வலியுறுத்தினார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கள் அவர் குறிப்பிட்ட கட்சிகளிடையே தற்போது விவாதங்களாக உருவெடுத்துள்ளன என்பது வேறு விஷயம்!

தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில்  ஒற்றுமையான, வலுவான மஇகாவைக் காண விரும்புகின்றேன் என்றும் நஜிப் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மாட்டு இறைச்சி பிரச்சனை

mic-assembly-2016-subra-garlanding-pm

பிரதமருக்கு மாலை மரியாதை வழங்கும் டாக்டர் சுப்ரா…

அரசாங்கம் எல்லா இனங்களுக்கும் சரிசமமான முறையில் கொள்கைகள் வகுத்து செயல்படுகின்றது என்று கூறிய நஜிப், இந்தியாவில் கூட மாட்டு மாமிசம் சாப்பிட்ட காரணத்திற்காக சில இஸ்லாமியக் குடும்பங்கள் பிரச்சனையை எதிர் நோக்கியதாகவும், மலேசியாவில் அவ்வாறு நடப்பதில்லை என்றும் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு இங்கு  பிரச்சனை ஏதும் ஏற்படுவதில்லை என்றும் நஜிப் தெரிவித்தார்.

“சரவாக்கில் தேர்தலில் தேசிய முன்னணி மாபெரும் வெற்றி பெற்றதையும், கோலகங்சார், சுங்கை பெசார் இடைத் தேர்தல்களிலும்  வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டிய நஜிப் ஆனால், இறுதிப்போரான 14-வது பொதுத் தேர்தலை வெற்றி கொள்ள நாம் தயாராக வேண்டும், அதற்காக மஇகா வலுவுடன் திகழவேண்டும். மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சாம்பியனாக மஇகா திகழ வேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.

மஇகா அனைவருக்காகவும், இந்திய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் போராடும், சேவையாற்றும் கட்சியாகவும், மாற வேண்டும் – அதே வேளையில், மஇகா தங்களை உள்நோக்கியும் பார்த்துக் கொள்ள வேண்டும் என நஜிப் மேலும் கேட்டுக் கொண்டதோடு, அனைவரையும் இணைத்துக் கொண்டு சேவையாற்றுவது, மிதமான, நடுநிலையான கொள்கைகள் என்ற நிலைப்பாட்டுடன் நாம் செயலாற்றினால் தேசிய முன்னணிக்கு மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நஜிப் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமரின் தமிழ் முழக்கம்

நஜிப் தனது உரையின்போது, “முன்னேறுவோம்” என தமிழில் முழங்கியதோடு “முன்னேறுவோம், முன்னேறுவோம்” என மீண்டும் தமிழில் கூறி “அதுதானே உங்களின் மஇகா பாடல்?” என்று பேராளர்களைப் பார்த்து பலத்த சிரிப்பொலிக்கு இடையில் கேட்டார்.

மீண்டும் தனது உரையை நிறைவு செய்தபோதும், “முன்னேறுவோம், முன்னேறுவோம்” என தமிழில் முழங்கி மஇகா பேராளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் பிரதமர்.

அதே மகிழ்ச்சியை இந்தியர்களுக்கான திட்டவரைவின் உள்ளடக்கத்திலும் தருவாரா?

-இரா.முத்தரசன்