சென்னை – உள்ளாட்சித் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சற்றே சோர்வடைந்திருந்த தமிழக தேர்தல் களத்தில், அரவக் குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற இடைத் தேர்தல்களும் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பைத் தொடர்ந்து மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்று சட்டமன்றங்களுக்கும் நவம்பர் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மற்ற அரசியல் கட்சிகள் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக தேர்தல் போட்டியில் குதிக்க ஆயத்தமாகி வந்தாலும், எல்லா கட்சிகளிடத்திலும், அவநம்பிக்கையும், தோல்வி மனப்பான்மையும் தொற்றிக் கொண்டுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகின்றது.
அதற்கான, காரணம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதும், அதன் காரணமாக தமிழகமெங்கும் எழுந்துள்ள அனுதாப அலைகளும்தான்.
இந்த அனுதாப அலைகளுக்கு மத்தியில் அதிமுகவை வென்று காட்ட முடியுமா என்ற அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், மற்ற கட்சிகள் இடைத் தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலைமை ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.
திமுக மட்டுமே எதனையும் வெளிக் காட்டாமல் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு சமர்ப்பிக்கலாம் என இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இறுதியில், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான போட்டியாகவே, 3 இடைத் தேர்தல்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காவிர் நதி நீர் பிரச்சனையால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்துள்ளது. தமிழகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போல்லோ மருத்துவமனை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வரப்போகும் 3 சட்டமன்றத் தேர்தல்களிலும், ஜெயலலிதாவின் அனுதாப அலையையும் மீறி, அதிமுகவை மற்ற கட்சிகள் வென்று காட்ட முடியுமா என்பதைக் காண மக்கள் தயாராகி வருகின்றனர்.