Home இந்தியா இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 8 : அரவக்குறிச்சி – கட்சி மாறியதால்...

இந்தியத் தேர்தல் – நட்சத்திரத் தொகுதிகள் # 8 : அரவக்குறிச்சி – கட்சி மாறியதால் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படுவாரா? தழுவிக் கொள்ளப்படுவாரா?

1327
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத் தொகுதிகளை விட அதிக ஆர்வமுடன் கண்காணிக்கப்படுபவை தமிழகத்தின் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள். இதில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்து முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே 19-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அன்றுதான் இந்தியப் பொதுத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்களிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் முக்கியமாக அனைவராலும் ஆவலுடன் பார்க்கப்படுவது அரவக்குறிச்சி சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலாகும். காரணம் இங்கு போட்டியிடும் செந்தில் பாலாஜி முன்பு அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததோடு, மறைந்த ஜெயலலிதாவின் அரசியல் அரவணைப்பையும் பெற்றிருந்தவர்.

#TamilSchoolmychoice

கால ஓட்டத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் அதிமுக இரண்டாகப் பிளவுபட டிடிவி தினகரனோடு இணைந்து செயல்பட்டார் செந்தில் பாலாஜி. அதிமுகவைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்து தினகரன் அமமுகவைத் தொடங்க, செந்தில் பாலாஜியோ அதிர்ச்சி தரும் வகையில் திமுக பக்கம் தாவினார். ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அரவக் குறிச்சி தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறார் ஸ்டாலின்.

2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கே.சி.பழனிசாமி வெற்றி பெற்றிருந்த அரவக் குறிச்சி தொகுதியை 2016 பொதுத் தேர்தலில் கைப்பற்றி சாதனை படைத்தவர்தான் செந்தில் பாலாஜி. ஆனால் பின்னர் சட்டமன்றத் தலைவரால் சட்டமன்றத் உறுப்பினர் தகுதி இழப்புக்கு ஆளான 18 சட்டமன்ற உறுப்பினர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர்.

2006, 2011 தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு போக்குவரத்து அமைச்சராகவும் ஜெயலலிதா அமைச்சரவையில் வலம் வந்த செந்தில் பாலாஜி, 2016 தேர்தலில் அரவக் குறிச்சிக்கு தொகுதி மாறினாலும் வெற்றி பெற்றார்.

இந்த முறை அதிமுக வேட்பாளராக அரவக் குறிச்சியில் களமிறங்கியிருப்பவர் வி.வி.செந்தில் நாதன். அமமுக சார்பில் ஷாகுல் ஹமீட் நிறுத்தப்பட்டுள்ளார்.

எனினும் போட்டி திமுக-அதிமுக இடையில்தான் என்பது தெளிவு!

அரவக் குறிச்சி தமிழக அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்படுவதற்குக் காரணம், இந்தத் தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் வெற்றி பெற்று தனது அரசியல் வலிமையை நிலைநாட்டுவதோடு, திமுகவுக்கும் தொகுதியை பரிசளிப்பாரா? அல்லது,

கடந்த முறை அதிமுகவுக்காக வாக்களித்த – அந்தக் கட்சியைப் பிரதிநிதித்ததால் செந்தில் பாலாஜிக்காக வாக்களித்த – அரவக் குறிச்சி வாக்காளர்கள் தங்களின் நம்பிக்கையைத் தகர்த்து திமுகவுக்குத் தாவிய காரணத்திற்காக செந்தில் பாலாஜியைத் தண்டிப்பார்களா?

என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ளத்தான் தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்!

இந்த முறை திமுகவுக்கு சாதகமான காற்று வீசுகிறது என்பதோடு, கடந்த முறை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் கே.சி.பழனிசாமியே தனக்கு சாதகமாக பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார் என்பதால் செந்தில் பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நேற்றுவரை அதிமுகவில் இருந்து எதிர் அரசியல் நடத்திவிட்டு, இன்று திமுகவில் இணைந்தவுடன் செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை கொடுக்கும் முக்கியத்துவம், மீண்டும் அரவக் குறிச்சியிலேயே போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்திருப்பது என்பதெல்லாம் அடிமட்ட திமுக தொண்டர்களிடையே எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது என்றும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சங்களால் செந்தில் பாலாஜி தோல்வியைத் தழுவலாம் என்ற ஆரூடமும் நிலவுகிறது.

அதே சமயம், கோவை, கரூர் வட்டாரங்கள் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படுபவை. எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்திற்கு இந்த வட்டாரங்களில் ஆதரவு அதிகம் என்றும் வேறு சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக, அதிமுக வாக்காளர்கள், கட்சி மாறி துரோகம் இழைத்த செந்தில் பாலாஜிக்கு வாக்களிக்க மாட்டார்கள் – தண்டிப்பார்கள் – அதன் காரணமாக அரவக் குறிச்சியில் செந்தில் பாலாஜி தோல்வியடைவார் என்பது வேறு சில அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.

மே – 19-ஆம் தேதி அரவக் குறிச்சிக்கான வாக்களிப்பு தினமாகும். மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் அரவக் குறிச்சி சட்டமன்றத்தை செந்தில் பாலாஜி  வென்று காட்டினால், திமுக கோட்டையில் அவர் ஹீரோவாகக் கொண்டாடப்படுவார்.

ஆனால், தோல்வியடைந்தால், திமுகவுக்குத் தேவையில்லாத செல்லாக்காசாகி விடுவார். அதன் பிறகு திமுகவில் அவருக்கு செல்வாக்கு இப்போது உள்ளது போல் இருக்குமா என்பது சந்தேகமே!

இவ்வாறு பல்வேறு அரசியல் கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால்தான் அரவக் குறிச்சி சட்டமன்றத் தொகுதி தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாக பலத்த எதிர்பார்ப்புகளை எழுப்பியிருக்கிறது.

-இரா.முத்தரசன்