Home வணிகம்/தொழில் நுட்பம் பழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே!

பழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே!

1864
0
SHARE
Ad

கூகுள் பிளே செயலிகள் அங்காடியில் சில புதிய வசதிகளை அண்மையில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவற்றுள் முதன்மையான ஒன்று, உங்கள் ஆண்டிராய்டு கருவியில், நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள செயலிகளுள், பயன்பாட்டில் இல்லாதவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுவது.

செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிது. பல வேளைகளில் அவற்றை ஓரிரு முறை திறந்து பார்த்து விட்டு மூடிவிடுகிறோம். அதன்பின் அவை திறன்பேசியில் நிறுவப்பட்டுள்ளதையும் மறந்து விடுகிறோம். இதுபோன்றச் செயலிகளின் எண்ணிக்கைக் கூடக் கூட, திறன்பேசியில் உள்ள சேமிப்பக இடம் (storage space) குறைந்து கொண்டே போகும். நாளடைவில் திறன்கருவியின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படவும் இந்த இடப் பற்றாக்குறை காரணமாக அமைந்துவிடும்.

அந்த நேரத்தில் ஒவ்வொன்றாகச் செயலிகளைத் தேடுவதற்கு நமக்கு நேரம் பிடிக்கலாம். ஓரிரு செயலிகளை மட்டும் நீக்கி விட்டுச் செல்கிறோம். இதே நிலைமை சுழன்று கொண்டே வரும்.

#TamilSchoolmychoice

இந்த இக்கட்டில் நமக்கு உதவுவதுதான் கூகுள் பிளே வழங்கும் இந்தப் புதிய வசதி.

சேமிப்பக இடம் மிகக் குறைவாக இருக்கும்போது, “கூடுதல் சேமிப்பக இடத்திற்காகப் பயன்படுத்தப்படாதச் செயலிகளை நீக்குக” என ஒரு விழிப்பூட்டல் அறிவிப்பு ஆண்டிராய்டு கருவியின் அறிவிப்பகத்தில் தோன்றும். அதனைத் தொட்டவுடன், திறக்கப்படாதச் செயலிகளின் பட்டியல் கொண்டு வரப்படும். பட்டியலில் உள்ள ஒவ்வொரு செயலிக்குறிய விளக்கமும் சேர்க்கப்படும். அங்கிருந்து தேவைப்படாதச் செயலிகளை நீக்கி, அவை அடைத்துக்கொண்டிருக்கும் இடத்தை மீட்டெடுக்கலாம்.

இந்த வசதி நெதர்லாண்டு நாட்டில் மட்டுமே இதுவரைக் காணப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கும் இது விரைவில் வரும் என்று எதிர்ப்பார்ப்போம்!

கூகுள் பிளே செயலிகள் மதிப்பீடு

கடந்தவாரம் நடந்து முடிந்த கூகுள் ஐ.ஓ. 2019 அனைத்துலக மென்பொருள் மேம்பாட்டாளர் மாநாட்டில், கூகுள் பிளேக்கான மேலும் ஒரு புதிய வசதியை கூகுள் அறிவித்தது. அது கூகுள் பிளேயில் உள்ள செயலிகளுக்கு வழங்கப்படும் மதிப்பீட்டை கணக்கிடும் முறை பற்றியது.

தற்போது ஒரு செயலிக்கான மதிப்பீடு, அதன் வாழ்நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறைந்த மதிப்பீட்டிற்குக் காரணமாக இருந்த ஒரு சிக்கல் நீக்கப்பட்டு விட்டாலும், அதற்கான மதிப்பீட்டில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய கணக்கிடும் முறையில், புதிய மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் படவுள்ளது. பழைய மதிப்பீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை ஒட்டுமொத்த மதிப்பீட்டைப் பாதிக்காமல் இருக்க இந்தப் புதிய முறை பெருமளவு உதவும்.

அதுமட்டுமல்லாமல், கூகுள் பிளேயில் பதிவு செய்யப்படும் பயனர் கருத்துகளுக்கு, செயலிகளில் உரிமையாளர்கள் எளிதாக பதிலளிப்பதற்கும் சில வசதிகளைச் சேர்த்துள்ளது கூகுள்.

இந்தப் புதிய வசதிகள் தரமான செயலிகள் உருவாகுவதற்கும் பயன்பாட்டிற்கு வருவதற்கும் பெரிதும் உதவுமென நம்புவோம்!

நன்றி : செல்லினம்