Home Featured தமிழ் நாடு தமிழக அரசியல் களத்தின் வித்தியாச தீபாவளி!

தமிழக அரசியல் களத்தின் வித்தியாச தீபாவளி!

769
0
SHARE
Ad

karunanidhi-jayalalitha

இன்று கடந்து போகும் தீபாவளித் திருநாள் குறிப்பாக இரண்டு அம்சங்களில், அண்மைய ஆண்டுகளில் – அதுவும் ஏறத்தாழ 30 ஆண்டுகளில் -இதுவரை நாம் காணாத தமிழக அரசியல் களமொன்றை நமக்குக் காட்டிவிட்டுச் செல்கின்றது.

மருத்துவமனையில் ஜெயலலிதா

#TamilSchoolmychoice

முதலாவது அம்சம் மருத்துவமனையில் ஜெயலலிதா இருக்கும் சூழல்!

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவு 1987-இல் நிகழ்ந்த பின்னர் அனைத்திந்திய அண்ணா திமுக கட்சியைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்த ஜெயலலிதா, பல முறை தமிழக முதல்வராக ஆட்சியைப் பிடித்தவர். தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்தவர்.

Jayalalithaஆனால், இப்போது அதிமுக தலைமைக்கு வந்தபின்னர் முதன் முறையாக, தமிழக மக்களுக்கு தீபாவளி செய்தி விடுக்க முடியாமல் – அவரது உடல்நிலை எப்படி இருக்கின்றது – என்பது மக்களுக்குத் தெரியாமல் – தமிழக அரசியல் களம் ஒரு வித்தியாசமான நிலைமையைச் சந்தித்து வருகின்றது.

அவரது உடல் நிலை இனியும் அவர் முதல்வராகத் தொடர்வதற்கு இடம் கொடுக்குமா, அதன் மூலம் தமிழக அரசியல் மாற்றம் பெறுமா என அரசியல் பார்வையாளர்களின் விவாதங்கள் தொடர்கின்றன.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் தனது அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான பாரத்தில், கையெழுத்து கூட போட முடியாமல், இடது கைவிரல் ரேகையைப் பதித்து அனுப்பும் அளவுக்கு ஜெயலலிதாவின் உடல் நிலை  மோசமாக இருக்கின்றது.

மருத்துவமனையில், ஜெயலலிதா இருக்க, சோகமான சூழலில் அதிமுக தொண்டர்கள் காத்திருக்க, இந்த தீபாவளி கடந்து போகும் அரசியல் களம் இதுவரை தமிழகம் பார்த்திராத ஒரு காட்சி.

கருணாநிதி, ஜெயலலிதா பிரச்சாரங்கள் இல்லாத உள்ளாட்சித் தேர்தல்கள் – சட்டமன்ற இடைத் தேர்தல்கள்

karunanidhiகடந்த 30 ஆண்டுகளாக, தமிழகத்தின் எந்த ஒரு தேர்தல் களமாக இருந்தாலும், அதில் திமுக சார்பாக, கருணாநிதி, அதிமுக சார்பாக ஜெயலலிதா ஆகிய இருவரின் அறிக்கைகளும், பிரச்சாரங்களும் இல்லாமல் அவை கடந்து போனதில்லை.

ஆனால், விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் சூழலில், தற்போது 4 சட்டமன்ற இடைத் தேர்தல்கள் (திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், புதுவையில் நெல்லிக்குப்பம்) நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், கலைஞரும், அம்மாவும் – இருவருமே உடல் நலம் குன்றி ஒதுங்கி இருக்கிறார்கள்.

கருணாநிதியும், மீசல்ஸ் (measles) எனப்படும் உடல் முழுவதும் ஏற்பட்டுள்ள கொப்பளங்களால் அவதிப்படுவதாகவும், இல்லத்தில் தங்கிக் கொண்டே சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதுமை, தளர்ச்சி காரணமாக, கருணாநிதியும் முன்புபோல் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

karunanidhi-jayalalitha-vijayakanth-anbumani-tamilisai-seeman3-600

இப்படியாக, இரு முக்கிய அரசியல் ஆளுமைகளும் களத்தில் இல்லாத நிலைமையும் – இதுவரை தமிழக அரசியல் களம் காணாத ஒரு காட்சி.

கலைஞருக்கு பதிலாக அவரது மகன் வாரிசு மு.க.ஸ்டாலின் களத்தில் பிரச்சார பீரங்கியாக நிற்க – அதிமுக சார்பாக அவர்களின் ஆட்சி, அதிகார பலமும், பண பலமும் பக்கத் துணையாக நிற்கின்றது.

முடிவு எப்படி அமையப் போகின்றது என்பதைப் பொறுத்து தமிழக அரசியலில் எதிர்கால காய் நகர்த்தல்களும் மாறும்.

ஆக, இந்தத் தீபாவளி, ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு முக்கிய அரசியல் ஆளுமைகள், முதன் முறையாகத் தங்களின் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத தமிழக அரசியல் களத்தையும், அவர்களின் பிரச்சாரங்கள் இல்லாத தேர்தல் களங்களோடும் கடந்து செல்கின்ற காரணத்தால், முக்கியத்துவம் பெறுகின்றது.

-இரா.முத்தரசன்