கோத்தா மெர்டு – பெர்சே 2.0 தலைவர் மரியா சின் இன்று பிற்பகல் 2.00 மணியளவில், சபாவில் கைது செய்யப்பட்டுள்ளார். நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 அரசாங்க எதிர்ப்புப் பேரணி குறித்த கையேடுகளை விநியோகித்த காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோத்தா மெர்டு நகரசபை மண்டபத்தில் பொதுமக்களுக்கு கையேடுகள் விநியோகித்த அவர் கைது செய்யப்பட்டதாக அவரது பெர்சே சகாக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கையேடுகள் விநியோகிப்பது சட்டத்துக்கு புறம்பானது என அவரைக் கைது செய்த காவல் துறை அதிகாரிகள் காரணம் தெரிவித்துள்ளனர்.
மரியா சின் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய காவல் துறை அதிகாரி அவரை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
பிற்பகல் 4.30 மணியளவில் பெர்சே 2.0 முகநூல் பக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள செய்தியின்படி மரியா சின் தற்போது பிணையில் (ஜாமீனில்) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தான் கைது செய்யப்பட்டுள்ளது அதிகார அத்து மீறல் என்றும் மரியா சின் சாடியுள்ளார். சட்டத்துக்கு ஏற்ப, பெர்சே கையேடுகளில் பெர்சேயின் முகவரி அச்சடிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் சட்டத்துக்கு புறம்பான முறையில் தாங்கள் நடந்து கொள்ளவில்லை என்றும் மரியா சின் கூறியுள்ளார்.