Home Featured நாடு நஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா?

நஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா?

695
0
SHARE
Ad

najib-china-visit-2016

பெய்ஜிங் – இன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தந்தையார் துன் அப்துல் ரசாக், பிரதமராகப் பதவியேற்றிருந்த 1974-ஆம் ஆண்டு காலகட்டம். யாரும் எதிர்பாராத வண்ணம் சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அந்நாட்டுக்கு அப்போது அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டார், துன் ரசாக்.

அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள், சீனாவை விட்டு ஒதுங்கியிருந்த நிலைமையில் மலேசியா முன்வந்து தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதும், மலேசியப் பிரதமரே அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டதும் உலக அரசியலில் அன்று மிகப் பெரிய ஆச்சரியத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

மலேசியாவில் கம்யூனிஸ்ட் ஊடுருவலை சீனா ஆதரித்து வந்திருந்ததால் சில கண்டனக் குரல்களும் அப்போது எழுந்தன.

 

china-malaysia-friendship-banner

ஆனால், துன் ரசாக்கின் வெளியுறவுக் கொள்கை உள்நாட்டில் சீன வாக்காளர்களிடையே அபாரமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது. சீனா பயணத்தை முடித்துக் கொண்டு அந்த ஆண்டிலேயே நாட்டின் பொதுத் தேர்தலை நடத்திய துன் ரசாக் தேசிய முன்னணிக்கு வரலாறு காணாத வெற்றியைக் கொண்டு வந்தார்.

1969 பொதுத் தேர்தலில், தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களித்த சீன வாக்காளர்கள், இந்த முறை துன் ரசாக் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தந்தனர். அவரது சீன வருகை அதற்கு ஒரு முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. கெராக்கான், பிபிபி போன்ற எதிர்க்கட்சிகளும் தேசிய முன்னணியில் இணைந்தது, தேசிய முன்னணியின் 1974 பொதுத் தேர்தல் வெற்றிக்கான மற்ற வலுவான காரணங்களாகும்.

மற்ற பிரதமர்களும் துன் ரசாக் அடிச்சுவட்டில்…

தொடர்ந்து மலேசியாவில் நடந்த அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களின் காலகட்டங்களைப் பார்த்தால், மலேசியப் பிரதமராக இருப்பவர் பொதுத் தேர்தலுக்கு முன்பாக சீனாவுக்கு வருகை ஒன்றை மேற்கொள்வது வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. சீன வாக்காளர்களைக் கவர்வதற்காக யுக்தியாகவும் அத்தகைய வருகைகள் பார்க்கப்படுகின்றன.

najib-china-visit-2016-1சீனா வந்தடைந்த நஜிப், தனது வருகை குறித்த விவரங்களை, போக்குவரத்து அமைச்சரான லியோவ் தியோங் லாய், முன்னாள் மசீச தலைவரும் சீனாவுக்கான நடப்பு மலேசியப் பிரதிநிதியுமான ஓங் கா திங் ஆகியோருடன் கலந்தாலோசிக்கிறார். உடன் இருப்பது மற்ற மலேசிய அமைச்சர்கள்…

அந்த வகையில் நேற்று சீனா சென்றடைந்த நஜிப்பின் வருகையையும் 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.

அதிலும் இப்போதைய சீனாவின் நிலைமையோ வேறு. பொருளாதாரத்தில் வலுவான நாடாகத் திகழ்வதால், மற்ற நாடுகளுக்கு நிதி உதவி புரிவதிலும், அந்த நாட்டின் கட்டுமானத் திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்பதையும் தனது வெளியுறவுக் கொள்கையாகவே கொண்டு சீனா செயல்படுகின்றது.

55 பில்லியன் கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்திற்கு சீனா நிதியுதவி

நஜிப்பின் வருகையின் ஒரு பகுதியாக மலேசியாவின் மிகப் பெரிய திட்டங்களுள் ஒன்றான கிழக்குக் கடற்கரை இரயில் திட்டத்திற்கு சீனா நிதியுதவி வழங்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

55 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்த திட்டம் நான்கு கிழக்குக் கடற்கரை மாநிலங்களைக் (ஜோகூர், பகாங், திரெங்கானு, கிளந்தான்) கடந்து செல்லும் மாபெரும் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் பொறியியல், கட்டுமானப் பொருட்களை பெறுதல், கட்டுமானம், நிர்மாணிப்பு என அனைத்துப் பணிகளும் சீனா கொம்யுனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி என்ற சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றது.

இதன் மூலம் சீன அரசாங்கம் பொருளாதார ரீதியாக மேலும் வலுவுடன் மலேசியாவில் காலூன்றுகின்றது. ஏற்கனவே பல திட்டங்களில் சீனா முதலீடு செய்தும், நிதியுதவி செய்தும் வருகின்றது.

najib-china-visit-2016-2சீனா வந்தடைந்த நஜிப் குழுவினருக்கு வரவேற்பு வழங்கப்படுகின்றது. நஜிப்புடன் கைகுலுக்குவது முன்னாள் மசீச தலைவரும், அமைச்சரும், சீனாவுக்கான நடப்பு மலேசியப் பிரதிநிதி ஓங் கா திங்….

நஜிப்பின் ஆறு நாட்கள் சீனா பயணத்தின்போது மொத்தம் 10 உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா வருகையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நஜிப் நாடு திரும்பியதும் அதன் தாக்கம், தேசிய முன்னணிக்கு ஆதரவான சீன வாக்காளர்களிடத்திலும், நடுநிலை சீன வாக்காளர்களிடத்திலும் பெருமளவில் இருக்கும் என்றும், அடுத்த சில மாதங்களுக்கு அவர்களின் மனங்களில் சில சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

china-malaysia-diplomatic-relations

தொடர்ந்து சீனாவுடன் கையெழுத்தாகப் போகும் பத்து உடன்படிக்கைகள், அதன் உள்ளடக்க அம்சங்கள், அதன் தொடர்பில் வெளியாகப் போகும் அறிவிப்புகள் ஆகியவையும், மலேசிய சீன வாக்காளர்களிடையே ஒரு சாதகமான, உற்சாகமான சூழலை, மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். அதன் தாக்கங்களும் அடுத்து வரும் சில மாதங்களுக்கு, ஊடகங்களின் வழியாகத் தொடர்ந்து மலேசிய வாக்காளர்களின் மனங்களில் ஆழப் பதிய வைக்கப்படும்.

இவை யாவும், அடுத்தாண்டு 14-வது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றது.

ஆக, நஜிப்பின் சீன வருகை நிறைவடைந்ததும், அந்த வருகையின் சாதகமான தாக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 14-வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை தேசிய முன்னணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்

படங்கள் – நன்றி – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் டுவிட்டர் பக்கம்