Home Featured தொழில் நுட்பம் நோத்தோ திட்டம்: 800க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான எழுத்துருக்கள்

நோத்தோ திட்டம்: 800க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான எழுத்துருக்கள்

765
0
SHARE
Ad

google-noto-fonts

கூகுளின் ‘நோத்தோ’ (NotTo) திட்டம்  அனைத்து மொழிகளுக்கும்,  சீரான உரு அமைப்பைக் கொண்ட எழுத்துருக்களை (fonts) உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம். இந்தத் திட்டம் கடந்த ஆறாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

கணினிகளின் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்த காலம் சில பத்தாண்டுகளுக்குமுன் இருந்தது. அப்போது மற்ற மொழி எழுத்துகளுக்கு எந்த இடமும் இல்லை. அவற்றைக் கணினிகளில் சேமிப்பதற்குக் குறியீடுகள் இல்லை. ஏதோ ஒரு குறியீட்டைக் கொண்டு சேமித்தாலும், அந்த எழுத்துகளைத் திரையில் தோற்றுவிக்கப் பொருத்தமான எழுத்துருக்களும் இருந்ததில்லை. எழுத்துருக்கள் இல்லாத மொழிகளில் தோன்றும் எழுத்துகள் கட்டங்களாகத் தோன்றின. இந்தக் கட்டங்களைத்தான் தோஃபூ (tofu) என்று ஆங்கிலத்தில் கூறுவர். (மலேசியாவில் தோஃபூவைத் ‘தௌ’ (tauhu) என்றும் கூறுவோம். சீனர் உணவுகளில் சேர்க்கப்படும் உணவு வகை).

#TamilSchoolmychoice

கணினிகளிலும் மற்றத் தொழில்நுட்பத் திரைகளிலும் இனி இந்தத் தோஃபூ தோன்றவே கூடாது என்பதற்காகத்தான் இந்த ‘நோத்தோ’ திட்டம் தொடங்கப்பட்டது. ஆங்கிலத்தில் ‘No Tofu’ (தோஃபூ வேண்டாம்) என்பதன் சுருக்கமே  ‘NoTo’.

மோனோடைப் எனப்படும் புகழ்பெற்ற எழுத்துரு நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுத்திய இந்தத் திட்டத்தின்வழி, கூகுள் இன்று 800க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு எழுத்துருக்களை உருவாக்கியுள்ளது. வணிகப் பயனீடு இல்லாத, பேசுவோர் மிகவும் குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட மொழிகளும் இனிக் கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் தடையின்றித் தோன்றும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, இந்தச் சிறுபான்மை மொழிகளுக்கும் உள்ளிடுமுறைகளைச் சில ஆர்வலர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்தோனீசியாவில் உள்ள பாலினீசு மொழியில் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என அந்த மொழியைப் பேசும் பலர் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். இளையோரிடையே பயன்பாடு குறைந்துவரும் இந்த வேளையில், இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புழக்கத்திலிருந்து அழியும் நிலையில் உள்ள மொழிகளை இன்னும் சில காலம் தற்காத்து உதவலாம். புழக்கத்திலிருந்து மறைந்த மொழிகளையும் மீட்டெடுக்க இந்தத்  திட்டம் உதவுவதாகவும் செய்திகள் வருகின்றன.

sellinam-notho-bali-iphone

பாலி மொழியில் கூகுள் தேடலும் குறுஞ்செய்தி கோத்தலும். நோத்தோ திட்டத்தில் பாலி மொழிக்காக உருவாக்கப்பாட்ட எழுத்துருக்கள் இங்கே பயன்படுகின்றன. விசைமுகம்: Balinese Font and Keyboard

தமிழுக்கான நோத்தோ எழுத்துருக்கள்

தமிழ்மொழிக்கு இரண்டு எழுத்துருக்களை இத்திட்டம் வழங்கியுள்ளது. இடைமுகப் பயன்பாட்டுக்காக (user interface) ஒன்று, ஆவணங்களுக்காக ஒன்று என இருவேறு வடிவங்களை இவை கொண்டுள்ளன. இரு வடிவங்களுக்கும் இயல்பு (regular), தடிப்பு (bold) என இரண்டு தடிம அளவுகள் (weight) கொடுக்கப்பட்டுள்ளன.

இடைமுகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ‘நோத்தோ சான்சு தமிழ்’ எழுத்துரு சீரான அளவையும், இடவெளியையும் கொண்டுள்ளது. புதிய ஆண்டிராய்டு பதிகைகளில், இதுவே தமிழுக்கான இயல்பான எழுத்துருவாக அமைகிறது.

sellinam-google_noto_sans_tamil_sample

ஆவணங்களுக்கான எழுத்துரு ‘நோத்தோ செரிஃப் தமிழ்’. இதில், எழுத்தளவும் இடவெளியும் நன்றாக அமைந்திருந்தாலும், ஒவ்வோர் எழுத்தின் வடிவங்களைச் சற்று மெருகேற்றலாம் எனத் தோன்றுகிறது. நீண்ட பனுவல்களைப் படிக்கும்போது, இரண்டு எழுத்துருக்களுமே சற்றுச் சோர்வை ஏற்படுத்துகின்றன.

sellinam-google_noto_serif_tamil_sample

இருப்பினும், முதல் முதலாக விண்டோசு-2000இல் சேர்க்கப்பட்ட ‘லதா’ என்னும் எழுத்துருவை விட, நோத்தோவின் தமிழ் எழுத்துருக்கள் பல வகையிலும் சிறப்பாகவே அமைந்துள்ளன.

நோத்தோ தமிழ் எழுத்துருக்களை இலவயமாகவே தரவிறக்கிப் பயன்படுத்தலாம்:

1. https://www.google.com/get/noto/#sans-taml
2. https://www.google.com/get/noto/#serif-taml

ஆப்பிள் கருவிகளில் இணைமதியும் கூகுள் கருவிகளில் நோத்தோ சான்சும் தமிழுக்கு தொடர்ந்து அழகு சேர்க்கும் என எதிர்பார்ப்போம்!

நன்றி: செல்லினம்

(கடந்த 12 அக்டோபர் 2016இல் செல்லினம்.காம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் மறு பதிவேற்றம்)