கோலாலம்பூர், மார்ச்20 – “சுலு ராஜா என்று அழைக்கப்படும் அஜிமுடி கிராம் ஒரு மலேசியர், அவர் சபாவிலுள்ள ‘கூடாட்’ என்ற இடத்தில் உதவி மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்” என்று பி.கே.ஆர் கட்சியின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி பி.கே.ஆர் கட்சியின் வியூக இயக்குனரான ரபிஸி ரம்லி கூறுகையில், “அஜிமுடி கிராம் பற்றிய உண்மையான விவரங்களைத் தெரிந்துகொள்ள கடந்த மாதம் முதல் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், ‘டத்து அக்பிமுடின் கிராம்’ (படம்) என்ற பெயரில் அவர் சபாவில் உதவி மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை பி.கே.ஆரின் துணைச்செயலாளர் டேரில் ஐகிங், தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள, 1975 ஆம் ஆண்டிற்கான அரசாங்க ஊழியர்களின் பெயர் பட்டியலின் மூலம் கண்டறிந்துள்ளார்.
எனவே, அஜிமுடி உண்மையில் மலேசியாவைச் சேர்ந்தவரா? அல்லது சபா அடையாள அட்டை மூலம் குடியுரிமை பெற்றவரா? மற்றும் பெரும்பாலான சபா வாசிகளைப் போல் அவரும் அம்னோ கட்சியின் உறுப்பினரா? போன்ற கேள்விகளுக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் விளக்கமளிக்க வேண்டும்” என்று ரம்லி கூறியுள்ளார்.