கோலாலம்பூர் – நீண்ட காலமாக, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இருவருக்கும் இடையில் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகளின் பலனாக இன்று சனிக்கிழமை (நவம்பர் 5) மதியம், மஇகா தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியின் வழி சோதிநாதன், தனது ஆதரவாளர்களுடன் அதிகாரபூர்வமாக மீண்டும் கட்சியில் இணையவிருக்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஇகா தலைமையகத்தின் தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், சோதிநாதனே இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும், பிரிந்து சென்ற சகோதரக் கிளைகள் மீண்டும் கட்சி வளையத்துக்குள் வர வேண்டும் என தீவிரமாகப் பாடுபட்ட வந்த டாக்டர் சுப்ராவுக்கு இது ஒரு முக்கிய அரசியல் வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
அதே வேளையில், தனது அரசியல் பயணத்தில், ஒரு முக்கியமான காலகட்டத்தில், சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்திருப்பதன் வழி, ஒரு திருப்பு முனையாக, சோதிநாதனும் மஇகாவில் மீண்டும் இணைந்து தனது அரசியல் பணிகளைத் தொடர்கின்றார்.
எஞ்சிய பழனிவேல் தரப்பினரின் நிலை என்ன?
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு ஆதரவாளர்கள் பலர் அவருடன் இணைந்து மஇகாவுக்குத் திரும்ப ஏனோ ஆர்வம் காட்டவில்லை.
மஇகாவுக்கு திரும்ப வேண்டும் என்ற ஆர்வம் பழனிவேல் தரப்பில் பலருக்கு இருந்தாலும், சோதிநாதனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அவர்கள் சோதிநாதனுடன் இணைந்து மஇகாவில் இணைய விரும்பவில்லை.
மாறாக, பழனிவேல் தரப்பின் மேலும் சில தலைவர்கள், டாக்டர் சுப்ரமணியத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்தடுத்த வாரங்களில் அவர்களும் மீண்டும் மஇகாவில் இணையும் அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனிவேல் தரப்பு ஆதரவாளர்கள் – கோப்புப் படம்
இந்நிலையில், சோதிநாதனுடன் சேர்ந்து மீண்டும் மஇகாவுக்கு திரும்பும் மஇகா கிளைகள் எவை, அதன் தலைவர்கள் யார் என்பது இன்றைய நிகழச்சியின் போதுதான் தெளிவாகத் தெரியவரும். பல கிளைத் தலைவர்கள் சோதிநாதனுடன் கட்சிக்கு திரும்புவதாக உறுதி கொடுத்திருப்பதாகவும், சோதிநாதனும் இறுதி நேரம் வரை பலரையும் தொடர்பு கொண்டு, மீண்டும் மஇகாவில் இணைவதில் ஏற்படக் கூடிய சாதக பலன்கள் குறித்து பழனிவேல் தரப்பினருக்கு விளக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
மஇகாவின் நடப்பு தலைவர்களின் நிலைப்பாடு என்ன?
அதே வேளையில் மஇகாவின் நடப்பு முன்னணித் தலைவர்களும் சோதிநாதனின் வருகையை வரவேற்கும் அதே வேளையில், சோதிநாதனின் வரவால் ஏற்படப் போகும் அடுத்த கட்ட அரசியல் மாற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள்.
காரணம், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் மஇகா கிளைகளில் ஒரு கணிசமான சதவிகிதத்தினர் சோதிநாதனுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்றாலும், பழனிவேல் தரப்பிலிருந்து எத்தனை கிளைகள், முக்கியத் தலைவர்களை சோதிநாதன் தன்னுடன் கட்சிக்குள் மீண்டும் கொண்டு வருகின்றார் என்பதைப் பொறுத்துத்தான், அவரது எதிர்கால அரசியல் பலமும் கட்சியில் கணிக்கப்படும்.
அடுத்த கட்சித் தேர்தலில் உயர்மட்டப் பதவிகளில் ஒன்றுக்கு சோதிநாதன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், பழனிவேல் தரப்பின் எத்தனை கிளைகள் அவருக்கு ஆதரவாக மீண்டும் இணைகின்றன என்ற கணக்கெடுப்பு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
அந்த கணக்கெடுப்பின் வழி கட்சியின் நடப்பு உயர்மட்டத் தலைவர்கள் தங்களின் எதிர்கால போட்டிகளுக்கான வியூகங்களை வகுப்பார்கள்.
பிரியப் போவது யார்? – பழனிவேல் தரப்பும் ஆர்வம்!
இது ஒரு புறமிருக்க, பழனிவேல் தரப்பின் எஞ்சிய ஆதரவாளர்களும் சோதிநாதனுடன் சேர்ந்து கொண்டு தங்களை விட்டுப் பிரியப் போவது யார் என்ற கண்காணிப்பை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
காரணம், சோதிநாதனுடன், பழனிவேல் தரப்பின் பெரும்பான்மையான கிளைத் தலைவர்கள் மீண்டும் மஇகாவில் இணைந்து விட்டால், அதன் பின்னர் அரசியல் அரங்கில் தற்போது பழனிவேல் அணியினர் என்ற ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் குழுவினர் பலத்த பின்னடைவை எதிர்நோக்குவர்.
சோதிநாதனைத் தவிர்த்த மற்ற பழனிவேல் தரப்பு தலைவர்களிடையே இனி என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு தரப்பு மீண்டும் மஇகாவில் இணைந்து விடுவோம் என்று வாதித்து வரும் வேளையில், இன்னொரு தரப்போ புதிய கட்சி அமைத்துப் போராடலாம் என திட்டம் வகுத்து வருகின்றார்கள்.
அவர்களுக்கும் இன்று சோதிநாதனுடன் இணையப் போகும் கிளைகள் எத்தனை என்ற கணக்கெடுப்பு முக்கியமாகும். காரணம் அதை வைத்துத்தான் அவர்களின் அடுத்த கட்ட அரசியல் முடிவுகளும், நடவடிக்கைகளும் அமையும்.
ஆனால், மஇகா தலைமைத்துவத்திற்கு நெருக்கமான சில தலைவர்கள் வேறு விதமான கருத்தை பின்வருமாறு முன்வைக்கின்றார்கள்.
“தேசியத் தலைவரைப் பொறுத்தவரை பேச்சு வார்த்தையின் மூலம் மீண்டும் சோதிநாதனை கட்சிக்குள் கொண்டு வந்திருப்பதே டாக்டர் சுப்ராவுக்கு ஒரு சாதனைதான். காரணம், பழனிவேல் தரப்பின் இரண்டாவது நிலை தலைவராகவே செயல்பட்டுக் கொண்டிருந்தவர் அவர். அரசாங்க வட்டாரங்களிலும் நல்ல அறிமுகமும், மஇகாவுக்குள்ளும் பரவலான ஆதரவையும் கொண்டிருப்பவர் அவர் என்பதால், அவரே மனம் மாறி மீண்டும் சுப்ராவுடன் இணைவதைத்தான் அனைவரும் சாதகமாகப் பார்க்கின்றார்களே தவிர, அவருடன் எத்தனை பேர் வரப் போகின்றார்கள் என்பது முக்கியமல்ல. அதை யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஏற்கனவே பழனிவேல் தரப்பைச் சேர்ந்த பல மஇகா கிளைத் தலைவர்கள் மஇகா தலைமையகத்தை அணுகி நேரடியாகக் கட்சியில் மீண்டும் இணைய பதிவு செய்துவிட்டார்கள். இப்போதைக்கு, கட்சியில் ஏற்படப் போகும் தாக்கம் சோதிநாதன் என்ற தலைவர் மீண்டும் கட்சிக்கு வருவதால்தானே தவிர, எத்தனை கிளைகள் அவருடன் வருகின்றன என்பதை வைத்து அல்ல. இருப்பினும் கணிசமான கிளைத் தலைவர்கள் சோதிநாதனுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கின்றோம்”
இருப்பினும், இன்று சனிக்கிழமை சோதிநாதன் அதிகாரபூர்வமாக மீண்டும் மஇகாவில் இணையும்போது, அவருடன் எத்தனை கிளைகள் பழனிவேல் தரப்பிலிருந்து இணையப் போகிறார்கள் என்ற கணக்கெடுப்பு அனைத்து தரப்பினராலும் ஆர்வத்துடனும், உன்னிப்பாகவும் கவனிக்கப்படும்.
-இரா.முத்தரசன்