Home Featured நாடு “இனி ஒரே மஇகாதான்! அதன் ஒரே தலைவர் சுப்ராதான்!” – இணைப்பு விழாவில் சோதிநாதன் முழக்கம்!

“இனி ஒரே மஇகாதான்! அதன் ஒரே தலைவர் சுப்ராதான்!” – இணைப்பு விழாவில் சோதிநாதன் முழக்கம்!

1077
0
SHARE
Ad

mic-sothi-rejoin-with-subra-devamany

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை, பழனிவேல் தரப்பின் நூற்றுக்கணக்கான கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்த ஒரு நிகழ்ச்சியில், அந்த மஇகா கிளைகளுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய டத்தோ எஸ்.சோதிநாதன் “இனி நமக்கு இருப்பது ஒரே மஇகா கட்சிதான். அதன் ஒரே தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்தான்” என பலத்த கரவொலிக்கிடையில் தெரிவித்தார்.

“நான் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன் பேசியபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக மஇகா எதிர்நோக்கிய பிரச்சனைகள் இதுவரை வரலாறு காணாத போராட்டங்கள் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனினும் அதையெல்லாம் தாண்டி, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து கட்சியின் மீண்டும் இணைந்திருக்கின்றோம். இந்த இணைப்பு குறித்து இன்று நேற்றல்ல – கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேசி வந்திருக்கின்றோம். ஆனால், எதற்கும் ஒரு நேரம் வேண்டும் இன்றுதான் அந்த இணைப்பு நடந்தேறுகின்றது. அதுவும் முருகன் சூரசம்ஹாரம் செய்த முக்கிய பக்தி நாளான இன்று இந்த முக்கிய நிகழ்ச்சி நடைபெறுகின்றது” என்றும் சோதிநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

mic-sothi-rejoin-subra-speech

நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா…

இன்றைய நிகழ்ச்சியில் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் வரவேற்புரையாற்ற, அதன் பின்னர் சோதிநாதன் உரையாற்றினார்.

தன்னைப் பொறுத்தவரையில், பழனிவேல் தரப்பின் ஏறத்தாழ 90 சதவீத கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்து விட்டன என்பதை தனது கணக்கெடுப்பு காட்டுவதாகவும், அரசியல் வேண்டாம் ஒதுங்கிக் கொள்கின்றோம் என விலகி நிற்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சோதிநாதன் தனது உரையில் கூறினார்.

தானும் தனது அணியினரும் மீண்டும் மஇகாவில் இணைவதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சோதிநாதன், மஇகாவில் தான் மீண்டும் இணைவதற்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டிய பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும் நன்றி தெரிவித்தார்.

mic-sothi-rejoin-crowd

சோதிநாதன் மீண்டும் மஇகாவில் இணைந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட மஇகா கிளைத் தலைவர்கள்…

“மஇகாவில் நிகழ்ந்த போராட்டங்கள் காரணமாக, சில வெளிக் கட்சிகள் ம இ காவின் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறி வைத்துள்ளன. ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல், மஇகாவுக்குரிய அனைத்து தொகுதிகளையும் மீண்டும் மஇகாவுக்கே வழங்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதன்படியே தேசியத் தலைவர் சுப்ராவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்” என்றும் சோதிநாதன் இன்று திரண்ட மஇகா தலைவர்களிடையே தெரிவித்தார்.

“இனி சந்தேகம் நமக்குள் வேண்டாம். ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு செயல்படாமல் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து செயல்படுவோம். நமக்குள் எழுந்தது குடும்பச் சண்டைதான். இதைவைத்து கட்சிக்கு வெளியில் உள்ளவர்கள் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. கடந்து போனவற்றை மறப்போம். இனி அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இனி நமக்கு இருப்பது ஒரே மஇகாதான். அதன் ஒரே தலைவர் சுப்ராதான். இதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம்” என்றும் சோதிநாதன் அறைகூவல் விடுத்தார்.

mic-sothi-rejoin-devamany

சோதிநாதன், மஇகா தேசியத் துணைத் தலைவர் தேவமணி ஆகியோருடன் மஇகா தலைவர்கள்….

இன்று தன்னுடன் இணையும் மஇகா கிளைத் தலைவர்கள் அனைவரும்,  விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் சுயசிந்தனையுடன், சொந்த விருப்பத்திற்கேற்ப இணைகின்றார்கள் என்றும் யாருக்கும் மயக்க ஊசி போட்டு இங்கு அவர்கள் கொண்டுவரப்படவில்லை என்றும் சோதிநாதன் தனது உரையில் கிண்டலாகக் கூறினார்.

சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடங்கப்பட்டிருக்கும் “கேஸ்” எனப்படும் ‘கெராக்கான் அண்டி சுப்ரா – Gerakan Anti-Subra” இயக்கத்தின் பிரச்சாரங்களை முறியடிப்போம் என்றும், இந்த இயக்கத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்றும் சோதிநாதன் முழங்கினார்.

சோதிநாதன் உரைக்குப் பின்னர் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாநிலம் வாரியாக ஒவ்வொரு மாநிலப் பிரதிநிதிகளும் மேடைக்கு சென்று மஇகா தேசியத் தலைவரிடம் மீண்டும் மஇகாவில் இணையும் கிளைத் தலைவர்களின் ஒப்புதல் பாரங்களின் பட்டியலை ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பழனிவேல் தரப்பிலிருந்து விலகி, சோதிநாதனுடன் மீண்டும் மஇகாவில் இணைந்த கிளைகளின் மொத்த எண்ணிக்கை 627 என்றும் அறிவிக்கப்பட்டது.

-செல்லியல் தொகுப்பு