கோலாலம்பூர் – பார்ட்டி வாரிசான் சபா தலைவர் முகமட் ஷாபி அப்டால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை அதிகாரபூர்வ இரகசியக் காப்பு சட்டத்தை மீறியதா என்பது குறித்து எழுந்த புகார்கள் தொடர்பில் இன்று காலை 10.00 மணியளவில் அவர் புக்கிட் அமானிலுள்ள காவல் துறை தலைமையகத்தில் விசாரிக்கப்படவிருக்கின்றார்.
இந்தத் தகவலை ஷாபி அப்டாலின் உதவியாளர் தெரிவித்ததாக, மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின், மற்றும் முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் அகமட் ஹூஸ்னி ஹானாட்ஸ்லா ஆகிய இருவரும் ஏற்கனவே தங்களின் நாடாளுமன்ற உரை தொடர்பில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று முன்னாள் அமைச்சர்களும் 1எம்டிபி குறித்து ஆற்றிய நாடாளுமன்ற உரைகள், அதிகாரத்துவ இரகசியக் காப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது என மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தெரிவித்ததைத் தொடர்ந்து காவல் துறை விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.