Home Featured நாடு மலாக்கா ஆற்றின் அடியில் கண்டறியப்பட்ட மஜாபாஹிட் சாம்ராஜ்யம்!

மலாக்கா ஆற்றின் அடியில் கண்டறியப்பட்ட மஜாபாஹிட் சாம்ராஜ்யம்!

931
0
SHARE
Ad

malacca-riverகோலாலம்பூர் – மலாக்கா ஆற்றின் அடியில் மஜாபாஹிட் சாம்ராஜ்யத்தின் வாழிடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மலேசிய வரலாற்றில் ஒரு மைல் கல் என நியூஜென் (புதிய தலைமுறை கட்சி) கட்சியின் தலைவர் டத்தோ குமார் அம்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்நாட்டில் ஒரு காலத்தில் இந்துக்கள் முக்கியப் பங்காற்றியிருப்பது இக்கண்டுபிடிப்புகளின் வழி உறுதியாகியுள்ளது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்பு ஏற்கனவே கெடா பூஜாங் பள்ளத்தாக்கு உள்ளிட்ட முந்தைய கண்டுபிடிப்புகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹாரோன் தலைமையிலான மாநில அரசாங்கம், இந்த வரலாற்றுக் கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பளித்து முறையாகப் பாதுகாத்தால் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் என்றும் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தில், இந்தோனிய அரசாங்கத்தை முன்மாதியாகக் கொள்ள வேண்டும் என மாநில அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். காரணம், உலகிலேயே அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடாக இருந்தாலும், இந்துக்களின் வரலாற்றுக் கண்டுபிடிப்புகளை முறையே பாதுகாக்கிறது (இந்தோனிசியா)” என்று குமார் தெரிவித்துள்ளார்.

மலாக்கா ஆற்றின் அடியில் சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில், 13-வது நூற்றாண்டைச் சேர்ந்த மஜாபாஹிட் சாம்ராஜ்யத்தின் வாழிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, நிபுணத்துவம் வாய்ந்த முக்குளிப்போர் குழு ஒன்று ஆற்றின் அடியில் சென்று இந்து ஆலயங்களின் தடங்களையும், கோட்டை போன்ற அமைப்பையும் கண்டறிந்துள்ளனர்.

தற்போதைய கண்டுபிடிப்புகள், 1400-ல் பரமேஸ்வரா மலாக்காவைக் கண்டறிவதற்கு முந்தைய காலத்தில், நீரில் மூழ்கிய நகரமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இது குறித்து மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹாரோனும், அது போன்ற வாழிடம் கண்டறியப்பட்டுள்ளது உண்மை தான் என ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.