புத்ராஜெயா – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டேவை நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்தார்.
அச்சந்திப்பில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் படி, பிலிப்பைன்ஸ் கடற்பகுதிகளில் மலேசியப் படைகள் நுழைவதற்கும், தீவிரவாதிகளை விரட்டிப் பிடிப்பதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றோடு இந்தோனிசிய தற்காப்பு அமைச்சகமும் இணைந்து இம்மாதத்தில் இந்நடவடிக்கைக்கான வேலைகளில் இறங்கவுள்ளன.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பிரதமர் நஜிப், “இப்போது நாம் பிலிப்பைன்ஸ் கடற்பகுதிக்குள் போகலாம். குறிப்பாக தீவிரவாதிகளைத் தேடும் பணிகளின் போது அவர்களைத் துரத்திச் செல்லலாம். எனினும், நாம் அவர்களின் கடல் எல்லைக்குள் நுழையும் போது கடற்படைக்கு தகவல் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.