Home Featured கலையுலகம் “நீக்கப்பட்டாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” – விஷால் பதில்!

“நீக்கப்பட்டாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” – விஷால் பதில்!

792
0
SHARE
Ad

vishal

சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.00 நிலவரம்) தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து, தான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இன்று மாலை நடிகர் விஷால் சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தின்  சார்பாக தனது நீக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் யாரும் கையெழுத்திடவில்லை என்று கூறிய விஷால், தான் செய்த தவறு என்ன என்பது தனக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

பத்திரிக்கைகளுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கத்தின் முத்திரை இடப்பட்டிருந்தாலும், அதிகாரபூர்வமாக இதுவரை எனக்குக் கடிதம் கிடைக்கவில்லை என்றும் விஷால் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

வழக்கறிஞர் மூலமாக அனுப்பப்பட்ட கடிதத்தில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், இருப்பினும் இன்னும் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் விஷால் மேலும் கூறினார்.

“எந்த முடிவையும் எதிர்நோக்குவேன். கேள்வி கேட்டதற்காக நீக்கப்பட்டிருக்கின்றேன். இருந்தாலும், தொடர்ந்து சினிமாத் தொழிலின் நன்மைக்காக, தயாரிப்பாளர்களின் நலனுக்காக குரல் கொடுப்பேன்” என்றும் விஷால் சூளுரைத்தார்.

“போண்டா, பஜ்ஜிதான் பிரச்சனையா?”

“போண்டா, பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு முடிவெடுக்கிறார்கள் என்று நான் கூறியதாக குற்றம் சாட்டியிருக்கின்றார்கள். போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று நான் கூறியதுதான் தவறா?” என்றும் விஷால் கூறியிருக்கின்றார்.

ஒரு பிரச்சனைக்காக கேள்வி கேட்பது கூட தவறா எனக் கேள்வி எழுப்பிய விஷால், இப்படித்தான் நடிகர் சங்கத்திலும் ஒரு கேள்வி கேட்கப் போய் பிரச்சனை பெரிதாக வெடித்தது என்றார். இதுகுறித்த சட்ட நிலைமையை இனிமேல்தான் தனது வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசிக்கப் போவதாகவும் விஷால் தெரிவித்திருக்கின்றார்.

திருட்டு விசிடி ஒரு குறிப்பிட்ட திரை அரங்கில் எடுக்கப்பட்டது என ஆதாரபூர்வமாக தகவல் கிடைத்து,  தெரிவித்தும் தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய விஷால், இதுதான் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம் என்று கூறினார்.

நடிகர் சங்க செயலாளராக இருக்கும் தனது நீக்கம் காரணமாக, நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் மோதல் உருவாகாது என்றும், இந்த விவகாரம் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையிலான மோதலாக உருவெடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் விஷால் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

விஷால் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி நிச்சயம்

இருப்பினும், தயாரிப்பாளர் சங்கத்திற்கான அடுத்த தேர்தல் நடைபெறும்போது, தனது ஆதரவாளர்கள் சார்பாக நிச்சயம் ஒரு குழு, நடப்பு பொறுப்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவார்கள் என்றும் விஷால் உறுதியோடு கூறினார்.

“நான் நீக்கப்பட்டுள்ளதால், நானே போட்டியிடுவேனா என்பது தெரியாது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நிச்சயம் ஒரு குழு போட்டியில் இறங்கும். ஜனநாயகத்தில் இது போன்ற போட்டிகள் ஆரோக்கியமானவைதான்” என்றும் விஷால் வலியுறுத்தினார்.

-செல்லியல் தொகுப்பு