Home Featured நாடு மஇகாவில் மீண்டும் இரமணனா?

மஇகாவில் மீண்டும் இரமணனா?

788
0
SHARE
Ad

RAMANAN-MIC

கோலாலம்பூர் – மஇகா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியத்துக்கு எதிராக தீவிர எதிர்ப்பு காட்டி வந்த, டத்தோ இரமணன் தனது எதிர்ப்புகளைக் கைவிட்டு மீண்டும் கட்சியில் இணையப் போகின்றார் என்ற தகவல்கள் தற்போது மஇகா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றன.

மஇகாவின் முன்னாள் பொருளாளரான டத்தோ இரமணன், கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து அவர் மத்திய செயலவைக்கு செய்திருக்கும் மேல் முறையீடு இன்னும் விசாரிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்புடன் இணைந்து கொண்டு டாக்டர் சுப்ரா குறித்து அமைச்சர் என்ற முறையிலும், தேசியத் தலைவர் என்ற முறையிலும் கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்து வந்தார் இரமணன்.

மஇகா தேசியப் பொதுப் பேரவை அண்மையில் நடந்தபோது, மாநாட்டுக்கு வெளியே சில நூறு பேர்களுடன் ஆர்ப்பாட்டமும் செய்தார் இரமணன்.

சோதிநாதன் மஇகாவுக்கு திரும்பியதால் ஏற்பட்ட மாற்றம்

RAMANAN-DAN-PALANIVEL-300x199இந்த சூழ்நிலையில், பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கித் தங்களின் போராட்டங்களைத் தொடர்வார்கள் என ஆரூடங்கள் கூறப்பட்டன.

ஆனால், கடந்த நவம்பர் 5-ஆம் தேதி, அதிரடியாக டத்தோ சோதிநாதன், 627 கிளைகளுடன் மீண்டும் சுப்ராவின் தலைமைத்துவத்தை ஏற்று கட்சிக்குத் திரும்ப, பழனிவேல் தரப்பு சிதறுண்டது.

தொடர்ந்து இன்னும் பழனிவேல் அணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முக்கியத் தலைவர்களான ஜோகூரைச் சேர்ந்த டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், பினாங்கைச் சேர்ந்த டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசீர்வாதம் ஆகியோரும் விரைவில் மஇகாவில் இணைவார்கள் என்றும் பகிரங்கமாக சோதிநாதன் அறிவித்திருந்தார்.

இதுவரை பாலாவும், ஹென்ரியும் சோதிநாதனின் அறிவிப்பு குறித்து மறுப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேலுவோ, ஸ்டார் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த  பேட்டியில், சோதிநாதனுடன் போனவர்களைக் காட்டிலும் அதிகமானவர்கள் இன்னும் தன்னுடன் இருக்கின்றார்கள் என்றும், சோதிநாதன் மற்றும் அவருடன் மஇகாவுக்குத் திரும்பிய கிளைகளின் விலகலால் தனது அணிக்குப் பாதிப்பில்லை என்றும் கூறியிருந்தார்.

புதிய கட்சி வழி இராமலிங்கம் போராட்டம்

K.Ramalingam MIC Batuபழனிவேல் தரப்பில் தலைமைச் செயலாளராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏ.கே.இராமலிங்கம் (படம்), தமிழ் நாளேடு ஒன்றுக்கு தெரிவித்த தகவலின்படி, மஇகாவுக்கு திரும்பும் உத்தேசமில்லை என்றும், புதிய கட்சி ஒன்றைத் தோற்றுவித்து அதன்வழி தங்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்திருந்தார்.

பழனிவேல் தரப்பில் எஞ்சியிருக்கும் கிளைகள், மற்றும் இராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்களுக்கு பக்கபலமாக இருப்பவர் இரமணன்தான் என்றும், அந்த அணியின் சார்பாக வியூகங்கள் வகுப்பதிலும், நீதிமன்ற வழக்குகளைத் தொடுப்பதற்குப் பின்னணியிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் இரமணன்தான் என்றும் பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில்தான், இரமணனுக்கு நெருக்கமான, மஇகா உதவித் தலைவர் ஒருவர், இரமணன் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதற்கு பெரும் முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

subra-dr-mic-photoஅதன் காரணமாகத்தான், கடந்த சில நாட்களாக, இரமணன் சார்பாக மஇகாவுக்கும், சுப்ராவுக்கும் எதிரான அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகின்றது.

தனக்கு எதிரான கருத்துகளைப் பலர் கூறி வந்தாலும், அதற்கு பதிலுக்குப் பதில் கூறிக் கொண்டிருக்காமல், தனது அமைச்சு மற்றும் கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் டாக்டர் சுப்ரா, தனது எதிர்ப்பாளர்கள் கட்சிக்குத் திரும்புவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல் கட்டமாக, இரமணன் கட்சிக்குத் திரும்புவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் மஇகா உதவித் தலைவர் ஒருவரின் செயலாளர்களில் ஒருவராக இரமணன் நியமிக்கப்படுவார் என்றும், இரண்டாவது கட்டமாக தனது உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக இரமணன் செய்து கொண்டுள்ள மேல்முறையீடு பரிசீலிக்கப்பட்டு மத்திய செயலவையால் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிகின்றது.

அதன்பின்னர், அதிகாரபூர்வமாக இரமணன் மஇகாவில் மீண்டும் ஐக்கியமாவார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.