கோலாலம்பூர் – வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ளும்படி மலேசியர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.
பெர்சே 5 சட்டை அணிந்த நிலையில், மகாதீர் பேசுவது போன்ற 1 நிமிடம் 37 நொடிகள் கொண்ட காணொளி ஒன்று தற்போது பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.
அதில் மகாதீர் கூறியுள்ளதாவது:-
“மலேசியா தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. (பிரதமர்) நஜிப் (அப்துல் ரசாக்)-ன் நிர்வாகம், இந்நாட்டில் பில்லியன் கணக்கில் கடனை ஏற்படுத்தியுள்ளது. அதனை அரசாங்கத்தாலும், மாநிலங்களாலும் திரும்பச் செலுத்த இயலாது”
“அதனால் தான் இந்த அரசாங்கத்திற்கு எதிராக நமது அதிருப்தியை வெளிபடுத்த டத்தாரான் மெர்டேக்கா மற்றும் இன்னும் சில இடங்களில் பெர்சே பேரணியை நடத்தவுள்ளோம்”
“இந்தப் பேரணியில் அனைத்து மலேசியர்களும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏனென்றால் அவர்கள் நம் நாட்டை சரி செய்யும் வழிமுறைகளைக் கண்டறியும் நோக்கமும், அரசாங்கத்தை மாற்றும் முடிவும் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் மிகப் பெரிய அளவில் பணத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஒருவர் இதற்கு மேல் தலைமை வகிக்க முடியாது”
“இது என்னுடைய நம்பிக்கை. அனைத்து மலேசியர்களும் பெர்சே பேரணியில் பங்கேற்று தங்களது முழு ஆதரவை வழங்குவார்கள் என நம்புகின்றேன்” – இவ்வாறு மகாதீர் கூறும் அக்காணொளியை தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லி காங் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.