Home Featured நாடு திடீர் விடுதலை அதிர்ச்சியால் அம்பிகா-மரியா சின் கண்ணீர்!

திடீர் விடுதலை அதிர்ச்சியால் அம்பிகா-மரியா சின் கண்ணீர்!

973
0
SHARE
Ad

ambiga-maria-chin

கோலாலம்பூர் – நாளை செவ்வாய்க்கிழமை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலையில் திடீரென அவர் எதிர்பாராதவிதமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரியாவின் விடுதலை குறித்து மலேசியாகினி இணையத் தளத்திற்கு  விவரித்துள்ள அம்பிகா “இன்று பிற்பகல் மரியாவிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என காவல் துறையினர்  தெரிவித்ததைத் தொடர்ந்து நான் புக்கிட் அமான் சென்றேன். அவர் வாக்குமூலம் தந்தபோது நான் அவருடன் இருந்தேன். வாக்குமூலம் எடுத்து முடிந்தவுடன், மரியாவை விடுதலை செய்யும் உத்தரவு காவல் துறைக்கு கிடைத்தது. அவர்கள் அதை எங்களுக்குத் தெரிவித்ததும் நாங்கள் இருவரும் அதிர்ச்சியாகி கண்ணீர் விட்டு அழுதோம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிற்பகல் 4.30 மணிக்கு மரியா விடுதலை செய்யப்பட்டார் என்பதை உறுதிப்படுத்திய காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, அதற்கான காரணங்களை வெளியிடவில்லை.

10 நாட்களுக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைந்த மரியா

விடுதலையானதும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தனது இல்லம் சென்ற மரியா தனது மூன்று மகன்களுடனும், குடும்பத்துடனும் 10 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் இணைந்தார்.

maria-chin-after-release-joins-family

விடுதலையடைந்து இல்லம் திரும்பியதும் குடும்பத்தினரை கட்டியணைத்து மகிழும் மரியா…

நவம்பர் 19-ஆம் தேதி பெர்சே பேரணி நடைபெற்ற வேளையில், ஒருநாள் முன்பாக நவம்பர் 18-ஆம் தேதி மரியா சின் கைது செய்யப்பட்டார். அவர்மீது சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு குற்ற சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாளை, மரியா மீதான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடக்கும்போது பெர்சே ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் நீதிமன்றத்தில் திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டதால், நாளை யாரும் நீதிமன்றத்தின் முன் திரள வேண்டாம் என பெர்சே தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏன் மரியா விடுதலை செய்யப்பட்டார்?

maria-chin

மரியா விடுதலை செய்யப்பட்டு விட்டதால் நாளை ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெறாது. இருப்பினும் மரியாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையாக தங்களின் மனுவை மீட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மரியா சின் கைதைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு அலைகள், அனைத்துலக மனித உரிமை மன்றங்கள் எழுப்பிய கண்டனங்கள் ஆகியவற்றைக் தொடர்ந்து மரியா சின் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

நாளை நடைபெறவிருந்த விசாரணையில், காவல் துறையும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகமும் போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனால், நீதிமன்றமே மரியா சின்னை விடுதலை செய்திருக்கக் கூடும் என்ற சட்ட சூழல் நிலவியது. அவ்வாறு நடப்பதைத் தவிர்க்கும் பொருட்டும் அதனால் ஏற்படக் கூடிய கண்டனங்களை முன்கூட்டியே தவிர்க்கும் பொருட்டும் காவல் துறையினரும், அரசு வழக்கறிஞர் அலுவலகமும் அவரை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.