Home Featured நாடு மைபிபிபி குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதி எது?

மைபிபிபி குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதி எது?

1230
0
SHARE
Ad

kayveas-myppp

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டே நடைபெறக் கூடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், மைபிபிபி கட்சிக்கு நாடாளுமன்றத் தொகுதி இந்த முறையும் ஒதுக்கப்படுமா – அவ்வாறு ஒதுக்கப்பட்டால் எந்தத் தொகுதியில் அந்தக் கட்சி போட்டியிடும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையேற்றிருக்கும் மைபிபிபி கட்சி கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிட்டது.

#TamilSchoolmychoice

2004ஆம் ஆண்டு வரை, அப்போது பிபிபி என அழைக்கப்பட்ட அந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத் தொகுதி எதுவும் தேசிய முன்னணி சார்பில் ஒதுக்கப்படவில்லை. 2004-ஆம் ஆண்டில் துன் அகமட் படாவி பிரதமராகச் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில், பிபிபி கட்சியை அங்கீகரிக்கும் வகையில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி அந்தக்  கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

myppp-logoஆனால் எந்தத் தொகுதியை பிபிபி கட்சிக்கு ஒதுக்குவது என்ற சர்ச்சையும் கூடவே எழுந்தது. காரணம், தேசிய முன்னணியின் எந்தக் கட்சியுமே பிபிபி கட்சிக்கு தங்களின் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்காத நிலையில் பிரதமரின் நேரடி தலையீட்டால், கெராக்கான் கட்சி பேராக் மாநிலத்தின் தைப்பிங் தொகுதியை பிபிபிக்கு விட்டுக் கொடுத்தது. அதற்கு மாற்றாக அம்னோவின் தொகுதியாக இருந்த புக்கிட் கந்தாங் தொகுதியை கெராக்கான் கட்சிக்கு விட்டுக் கொடுத்தது அம்னோ.

2004-இல் தைப்பிங்கை வென்ற கேவியஸ்….

இந்த ஏற்பாட்டால், பேராக் மாநிலத்தில் ஒரு காலத்தில் சீனிவாசகம் சகோதரர்களால்  தோற்றுவிக்கப்பட்டு, வலுவான கட்சியாகத் திகழ்ந்த பிபிபி, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பேராக் மாநிலத்தில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

2004 பொதுத் தேர்தலில் மகாதீருக்குப் பின்னர் தலைமையேற்ற படாவியின் தலைமைத்துவத்தால், தேசிய முன்னணி 90 சதவீத நாடாளுமன்றத் தொகுதிகளை வெற்றி கொள்ள அதன் மூலம் கேவியசும் தைப்பிங் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். துணையமைச்சராகவும் பதவி வகித்தார்.

புக்கிட் கந்தாங் தொகுதியில் கெராக்கான் கட்சியின் சார்பாக டான் லியான் ஹோ என்ற பெண்மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

taiping-2004-parliament-results-kayveas

2004 பொதுத் தேர்தலில் பிபிபி சார்பாகப் போட்டியிட்ட கேவியஸ் பெற்ற வாக்கு விவரங்கள்…

2004 பொதுத் தேர்தலில் கேவியஸ் வெற்றி பெற்றாலும், அது அதிர்ஷ்டவசமான ஒன்றாகவே அவருக்கு அமைந்தது. காரணம், 2,172 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் தைப்பிங் தொகுதியில் வெற்றி பெற்றாலும், அவரை எதிர்த்து நின்ற ஜசெக 17,957 வாக்குகளும், பிகேஆர் கட்சி 4,371 வாக்குகளும் பெற்றன. அப்போது, இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி எதுவும் இல்லை என்ற காரணத்தால், பல தொகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளும் நேரடியாக ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிட்டன.

அந்த வகையில் தைப்பிங் தொகுதியில் தேசிய முன்னணிக்கு கிடைத்த 20,129 வாக்குகளை விட எதிர்க் கட்சிகளுக்கு கூடுதலாக 22,328 .வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் அவை பிரிந்து நின்ற காரணத்தால், கேவியஸ் சுலபமாக வென்று வர முடிந்தது.

2008 பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து, தேசிய முன்னணியை எதிர்த்து ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தி, நேருக்கு நேர் மோதிய காரணத்தால்தான் பக்காத்தான் கூட்டணி பல தொகுதிகளில் வெல்ல முடிந்தது என்பதற்கு சிறந்த உதாரணம் தைப்பிங் தொகுதி.

2008 பொதுத் தேர்தலில் தைப்பிங்கை பறிகொடுத்த கேவியஸ்

gerakan-logoதொடர்ந்து வந்த 2008 பொதுத் தேர்தல், பிபிபி கட்சிக்குச் சோதனையாக அமைந்தது. கெராக்கான் கட்சி தாங்கள் பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்த தைப்பிங் தொகுதியை மீண்டும் கேட்க, அம்னோவும் அதற்கு மாற்றாக, புக்கிட் கந்தாங் தொகுதிக்குப் பதிலாக, கிரிக் தொகுதியை பிபிபி கட்சிக்கு விட்டுத் தர முன்வந்தது.

ஆனால், 2004 முதல் 2008 வரை தைப்பிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் ஆற்றிய பணிகளால் மீண்டும் தன்னால் அங்கு வெல்ல முடியும் என்று நம்பிய கேவியஸ், விடாப்பிடியாக மீண்டும் தைப்பிங் தொகுதியே வேண்டும் என்றார். வேறு வழியின்றி கெராக்கான் மீண்டும் தைப்பிங் தொகுதியை பிபிபிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, அதற்கு மாற்றாக அம்னோ ஒதுக்கிய கிரிக் தொகுதியில் கெராக்கான் சார்பாக, டான் லியான் ஹோ போட்டியிட்டார்.

இங்குதான் விதி விளையாடியது. 2008 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமியால், தைப்பிங் தொகுதியில் கேவியஸ் தோல்வியடைந்தார்.

ஆனால், மீண்டும் தைப்பிங் தொகுதியைக் கேட்டு அது கிடைக்காமல் கிரிக் சென்று போட்டியிட்ட டான் லியான் ஹோ அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதாவது, தைப்பிங் தொகுதியை கெராக்கானுக்கே மீண்டும் விட்டுக் கொடுத்துவிட்டு, கேவியஸ் கிரிக் தொகுதியில் போட்டியிட்டிருந்தால் அவரால் மீண்டும் வெற்றி பெற்றிருக்க முடியும். நாடாளுமன்றத்திலும் நுழைந்திருக்க முடியும்.

taiping-parliament-2008-ge-results 2008 பொதுத் தேர்தலில் தைப்பிங் தொகுதியில் கேவியஸ் பெற்ற வாக்கு விவரங்கள்….

2008 பொதுத் தேர்தலில் பிகேஆர், ஜசெக இரண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், ஜசெக வேட்பாளர் ங்கா கோர் மிங் 11,298 வாக்குகள் பெரும்பான்மையில் தைப்பிங் தொகுதியில் வெற்றி பெற்றார்.

2013 பொதுத் தேர்தலிலும் மீண்டும் பிபிபி கட்சி தங்களுக்கு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டுமென தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், இந்த முறை கெராக்கான் தைப்பிங் தொகுதியை விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, தான் வழக்கமாகப் போட்டியிட்டு வந்த கோலாலம்பூரிலுள்ள கெப்போங் தொகுதியை பிபிபி கட்சிக்கு விட்டுக் கொடுத்தது.

தைப்பிங் தொகுதியில் மீண்டும் கெராக்கான் போட்டியிட்டாலும், அது தோல்வியையே தழுவியது. அந்த வகையில், தைப்பிங் தொகுதி தற்போது பிபிபி கட்சியை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது எனலாம்.

Chandrakumanan-Sliderவழக்கமாக, கெப்போங் தொகுதியில் ஜசெகதான் தொடர்ந்து வென்று வந்துள்ளது. 2013 பொதுத் தேர்தலில் கெராக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்ற நிலையில் அங்கு போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் கேவியஸ்.

இருப்பினும், தனது கட்சிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கேவியஸ் தோல்வி நிச்சயம் என்று தெரிந்திருந்தும் கெப்போங் தொகுதியைப் பெற்றுக் கொண்டு, பிபிபி சார்பாக அப்போதைய பிபிபி கூட்டரசுப் பிரதேச தலைவர் டத்தோ சந்திரகுமணனை  நிறுத்தினார். எதிர்பார்த்தது போலவே, கெப்போங் தொகுதியில் பிபிபி தோல்வியைத் தழுவியது.

பிபிபி கட்சிக்கு இறுதி நேரத்தில் 2013 பொதுத் தேர்தலில் பேராக் சட்டமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட பாசிர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் கேவியசே போட்டியிட்டு, அதிலும் தோல்வி கண்டார்.

பிபிபி – மைபிபிபியாக உருமாற்றம்

கடந்த ஆண்டு பிபிபி கட்சிக்கு மறுவடிவமும், மறுதோற்றமும் தேவை என அறைகூவல் விடுத்தார் கேவியஸ். அதன்படி கட்சியின் பெயரும், தோற்றமும் மைபிபிபி என மாற்றம் கண்டது.

இருப்பினும் நிதர்சன அரசியல் சூழ்நிலையை மீண்டும் ஒரு முறை எதிர்நோக்க தயாராகி வருகின்றது மைபிபிபி. இந்த முறை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டால், தான் போட்டியிடக் கூடும் என கேவியஸ் கோடி காட்டியுள்ளார்.

kayveasஆனால், மீண்டும் கெப்போங் தொகுதி என்றால், தோல்வி நிச்சயம் என்பதால் அவர் கண்டிப்பாக அங்கு போட்டியிடமாட்டார்.

பாதுகாப்பான தொகுதி ஒன்றை மைபிபிபி எதிர்பார்க்கின்றது என்றாலும், இன்றைய அரசியல் சூழ்நிலையில், தேசிய முன்னணி சார்பாக பாதுகாப்பான தொகுதி என எதுவும் இல்லை.

இருந்தாலும் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றைக் குறிவைத்து மைபிபிபி தலைமைத்துவம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என மைபிபிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் தொகுதிகள் எதுவும் இந்த முறையும் இல்லை என்பதால், மைபிபிபிக்கு தேசிய முன்னணியின் எந்த கட்சி தனது நாடாளுமன்றத் தொகுதியை விட்டுத் தரப் போகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. மீண்டும் கெராக்கான் முன்வருமா, அம்னோவும் விட்டுக் கொடுக்குமா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

அதே வேளையில், மைபிபிபி சார்பாகப் போட்டியிட கேவியஸ் குறிவைத்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதி எது?

அவர் எதிர்பார்க்கும்படி அந்தத் தொகுதி மைபிபிபிக்கு தேசிய முன்னணி தலைமைத்துவத்தால் ஒதுக்கப்படுமா?

காத்திருக்கின்றன, மைபிபிபி கட்சியின் வட்டாரங்கள்!

-இரா.முத்தரசன்