Home Featured நாடு “பெர்சே போலி – எதிர்க்கட்சிகளின் கருவி” – நஜிப் சாடல்!

“பெர்சே போலி – எதிர்க்கட்சிகளின் கருவி” – நஜிப் சாடல்!

520
0
SHARE
Ad

Najib-

கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5.0 பேரணி வெற்றியடைந்தால், பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல் அம்னோவிலும், நாடு தழுவிய அளவிலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் பேரணியை எதிர்த்து நஜிப் கடுமையாகச் சாடி அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார்.

தனது வலைத் தளத்தில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகளில், “பெர்சே ஒரு போலியான போராட்டம்” என்றும் “இரண்டாவது பெர்சே போராட்டம் முதற் கொண்டு நாளை நடைபெறவிருக்கும் 5 வது போராட்டம் வரை எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றார்கள் என்று குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

தேர்தல் மறுசீரமைப்புக்கான அரசு சார்பற்ற நடுநிலை இயக்கம் என்று கூறிக் கொள்ளும் பெர்சே இயக்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை எதிர்க்க தற்போது எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்படுகின்றது என்றும் நஜிப் சாடியுள்ளார்.

தொடக்க காலத்தில் தூய்மையான, நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பெர்சே இன்று எதிர்க்கட்சிகளின் கைப்பாவையாக மாறிவிட்டது என்றும் நஜிப் கடுமையாகக் குறை கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக கூறும் பெர்சே இப்போது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை ஆராதிக்கிறது என்றும் நஜிப் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனாலும் நாளை சிவப்பு சட்டை அணியினரும் பேரணி நடத்துவது குறித்து நஜிப் தனது பதிவில் ஆதரித்தோ, எதிர்த்தோ எந்தவிதக் கருத்துகளையும் வெளியிடவில்லை.

மகாதீர் கலந்து கொள்ள மாட்டார்

Tun Mahathir

இதற்கிடையில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருப்பதால், பெர்சே 5.0 பேரணி கடந்த பேரணிகளை விட பிரம்மாண்டமானதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், மகாதீர் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சி காரணமாக வெளிநாட்டில் இருப்பார் என்றும், அதன் காரணமாக அவர் பெர்சே பேரணியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், மொகிதின் தலைமையில் பெர்சாத்து கட்சியின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.