Home Featured நாடு யுபிஎஸ்ஆர்: மலாய் மொழியில் டி எடுத்தாலும் நேரடியாக முதலாம் படிவம்!

யுபிஎஸ்ஆர்: மலாய் மொழியில் டி எடுத்தாலும் நேரடியாக முதலாம் படிவம்!

874
0
SHARE
Ad

P. Kamalanathanகோலாலம்பூர் – யு.பி.எஸ்.ஆர் மலாய் மொழி பாடத்தில் டி எடுத்த மாணவர்கள் நேரடியாக முதலாம் படிவம் செல்லலாம் என கல்வித் துணயமைச்சர் டத்தோ ப.கமலநாதன் உறுதியளித்துள்ளார்.

இவ்வாண்டு யு.பி.எஸ் ஆர் மலாய் மொழித் தேர்வில் டி எடுத்த மாணவர்கள் புகுமுக  வகுப்புக்குச் செல்லத் தேவையில்லை என கல்வித் துணையமைச்சர் தமதறிக்கையின் வழி தெரிவித்தார்.

சமுதாயத்தின் தேவையறிந்து உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட கல்வியமைச்சருக்கும், கல்வி இயக்குனருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இவ்வாண்டு யு.பி.எஸ்.ஆர் மதிப்பீட்டுச் சோதனையில் மலாய் மொழிப் பாடத்தில் சி கிரேட் வரை பெற்ற மாணவர்கள் மட்டுமே முதலாம் படிவம் செல்லலாம், இதர மாணவர்கள் புகுமுக வகுப்புக்குச் செல்ல வேண்டும் என கல்வியமைச்சின்  சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக முதலாம் படிவம் செல்ல குறைந்த பட்சம் மலாய் மொழித் தேர்வில் அவர்கள் சி கிரேட் பெற்றிருக்க வேண்டும்.

இதனால் மலாய் மொழியில் டி பெற்ற தமிழ், சீனப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கட்டாயம் புகுமுக வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை பல பெற்றோர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதனைக் கருத்தில் கொண்டு, கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அவர்கள் கல்வியமைச்சர் டத்தோ ஸ்ரீ மாட்சீர் காலிட்டிடமும், கல்வி இயக்குனர் டான் ஸ்ரீ கீர் முகமாட் அவர்களிடமும் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதன் விளைவு கல்வித் துணையமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப, யு.பி.எஸ்.ஆர் மதிப்பீட்டுச் சோதனையில் மலாய் மொழி பாடத்தில்  டி  எடுத்த மாணவர்களும் நேரடியாகப் படிவம் ஒன்றுக்குச் செல்ல, நடப்பில் உள்ள  சுற்றறிக்கையில் மாற்றம் செய்து, மாணவர்கள் முதலாம் படிவம் செல்ல கூடிய விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில் மலாய் மொழி யு.பி.எஸ்.ஆர் மதிப்பீட்டுச் சோதனைக்கு அமர்ந்த 14,664 தமிழ்ப்பள்ளி மாணவர்களில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாம் படிவம் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.