கான்பூர் – மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்பட்ட இந்தூர் – பாட்னா எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள புக்ரயான் என்ற இடம் அருகே சென்று கொண்டு இருந்த போது தடம் புரண்டது.
இவ்விபத்தில் பெட்டிகள் கவிழ்ந்து ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கியதில், அதிகாலை வேளையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பல பயணிகள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நேற்று வரை 126 ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று 133 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.