கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் கொண்டுவர முனைந்துள்ள ஹூடுட் சட்ட மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பினும் அது நாட்டுக்குத் தேவையில்லை என்றும் தற்போது இருக்கும் மலேசிய அரசியல் சாசனமே போதுமானது என்றும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
ஆரம்பம் முதலே, ஹாடி அவாங்கின் ஹூடுட் சட்ட மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ள மஇகா, மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுடன் இணைந்து இந்த மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்துள்ளது.
இது குறித்து சுப்ரா விடுத்துள்ள அறிக்கையில் “நமது நாட்டை உருவாக்கிய நமது முன்னோடித் தலைவர்கள், நமது நாட்டின் வரலாற்றுபூர்வ அம்சங்களையும், சமூக அமைப்பின் படிமங்களையும் நன்கு ஆராய்ந்து, அதன் பிரதிபலிப்பாகவே, ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின்னர் நமது அரசியல் சாசனத்தை உருவாக்கி, அந்த அரசியல் சாசனத்தை அடிப்படையாக வைத்து நாட்டையும் நிர்மாணித்தனர். ஷாரியா சட்டங்கள் தெளிவாக மாநில சட்டங்கள் என்றும் முஸ்லீம் மதம் மற்றும் முஸ்லீம் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் நிர்ணயித்தனர்” என்று கூறியுள்ளார்.
கிளந்தானில் பாஸ் கட்சி கொண்டு வந்திருக்கும் இஸ்லாமிய சட்டம், ஏற்கனவே இருக்கும் நமது பொது குற்றவியல் சட்டத்தின் அம்சங்களில் பலவற்றை ஊடுருவிப் பாதிக்கிறது என்றும் கூறியுள்ள சுப்ரா, அதன் பல அம்சங்கள் நமது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என பலர் கூறியிருந்தாலும், அது சட்டரீதியாக செல்லுமா என்பது குறித்து இதுவரை யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
“இந்நிலையில், அந்த கிளந்தான் சட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில் மாராங் நாடாளுமன்ற உறுப்பினர், தனிநபர் மசோதாவாக அதனை முன்னெடுத்துச் செல்ல முனைந்திருப்பதும், ஷாரியா நீதிமன்றங்களுக்கு அதன்மூலம் கூடுதல் அதிகாரம் வழங்க முயற்சி செய்வதும் கவலையளிக்கின்றது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் சாசனமே போதுமானது
இதுநாள் வரையில் நமது சட்ட அமைப்பு நமது நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் சென்றுள்ளது என்பதோடு, நாடு இன்று இருக்கும் உயர்ந்த நிலைக்கு வருவதற்கான கட்டமைப்பையும், சட்ட அமுலாக்கத்தையும் உருவாக்கித் தந்திருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கும் சுப்ரா, “இந்த நல்ல சூழலைப் பாதிக்கும் வண்ணம் சரிநிகர் சமமான மற்றொரு சட்ட அமைப்பு முறையை உருவாக்க முனைவதும், நடப்பில் இருக்கும் சட்டங்களுடன் முரண்பாடு கொள்ளும், நகலாகப் பிரதிபலிக்கும், சட்டங்கள் உருவாவதும், ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு தண்டனைகள் வழங்கும் நடைமுறைகள் அமுலுக்கு வருவதும் நாட்டில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டின் அமைதியையும், நிலைத் தன்மையையும் குலைத்து விடும்” என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது இருக்கும் அரசியல் சாசனமே போதுமான ஒழுக்க நெறிகளையும், சமூக, சட்ட அடிப்படைப் பாதுகாப்புகளையும் வழங்கி நாட்டின் மேம்பாட்டுக்கு உத்தரவாதம் தருகின்றது. இன்றைக்கு நாம் காணும் அழகான, வளமான மலேசியா, இந்த அரசியல் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இத்தனை வளர்ச்சிகளைப் பெற்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நமது அரசியல் சாசனத்துக்கும், அதன் உணர்வுகளுக்கும் எதிராகவோ, மாற்றாகவோ, முன்மொழியப்படும் எந்த ஒரு சட்டதிருத்தத்தையும் மஇகா எதிர்த்துப் போராடும் – இடம் கொடுக்காது. இதனையே நாம் பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளோம். இனிவரும் கலந்துரையாடல்களிலும் ஆணித்தரமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்” என்றும் சுப்ரா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.