கோலாலம்பூர் – சிரியாவின் ஐஎஸ் அமைப்பில் இருக்கும் சுமார் 50 மலேசியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்களோடு சேர்த்து மொத்தம் 60 மலேசியர்கள் ஐஎஸ் அமைப்பில் இருக்கிறார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், அவர்கள் நாடு திரும்ப விரும்பினால் அதிகாரிகள் அதற்கு உதவி செய்வார்கள். எனினும், அவர்கள் திருந்தியிருந்தாலும் கூட, நாடு திரும்பியவுடன் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
“வழி இருக்கும் பட்சத்தில், தன் மக்களுக்காக இதை செய்வது ஒரு நாட்டின் கடமை. நமது நாட்டுக் குடிமகன்கள் என்ற முறையில் காவல்துறை அவர்களுக்கு உதவி செய்யும். அதேவேளையில், அதில் நிறைய பேர் தங்களது கடப்பிதழ்களை எரித்தும், கிழித்தும் எறிந்திருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். என்றாலும் நிறைய பேர் நாடு திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்”
“(ஐஎஸ்) அங்கிருந்து விடுபட அவர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், பலர் அதற்கு முயற்சி செய்து வருகின்றார்கள். அவர்கள் முயற்சி செய்தால் ஐஎஸ் அவர்களைக் கொன்று விடும்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.