கோலாலம்பூர் – மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக மலேசியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
கொட்டும் மழையிலும் “கொலைகளை நிறுத்துங்கள் – இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள்” என்பது போன்ற முழக்கங்களோடு, தலைநகரில் உள்ள தாபோங் ஹாஜி எனப்படும் மெக்கா புனிதப் பயண யாத்ரீகர்களுக்கான நிதி வாரியக் கட்டிடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டு ஆலோசனை மன்றம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் 10 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று மியன்மார் தூதரகத்தில் ஆட்சேப மனு ஒன்றையும் சமர்ப்பித்தது.
இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும், இந்தோனிசியா தலைநகர் ஜாகர்த்தாவிலும் நடைபெற்றன.