உலு சிலாங்கூர் – செரண்டா, தாமான் இடாமனில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயமடைந்ததோடு, 10 வாகனங்களும், உணவுக்கடை ஒன்றும் சரிவில் சிக்கின.
காயமடைந்த மொகமட் பரீஸ் (வயது 21) செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குநர் மொகமட் சானி ஹாருல் பெர்னாமாவிடம் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தில் அமைந்திருந்த உணவுக்கடையில் சாப்பிடுவதற்காக வந்தவர்கள் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு கார்களை இழுத்துச் சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதிகாலை 1 மணியளவில் அவசர அழைப்பு வந்தவுடன் கோல குபு பாருவிலிருந்து 6 வீரர்கள் தேவையான வசதிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் மொகமட் சானி தெரிவித்துள்ளார்.
“தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு, சரிவில் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்பதையும் சோதனை செய்து வருகின்றோம்” என்று மொகமட் சானி கூறியுள்ளார்.
இதனையடுத்து, தாமான் இடாமன் செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.