கோலாலம்பூர் – பெர்சே தலைவர் மரியா சின் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது சட்டமுறைப்படிதான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி கூறியுள்ளார்.
நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அபாண்டி அலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினரின் விசாரணைகளின் முடிவுகளுக்குப் பின்னர் மரியா சின் மீதான வழக்கை பொருத்தமான முறையில் தனது அலுவலகம் ஆராயும் எனவும் அபாண்டி அலி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மரியா சின் நலமாக உள்ளார்
இதற்கிடையில் தடுப்புக் காவலில் இருக்கும் 60 வயதான மரியா, நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறியுள்ளார்.
மரியா சின்னைச் சார்ந்தவர்கள் கவலையுற்றிருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும் என்றும் கூறியுள்ள காலிட், அதே சமயம் எங்களுக்கும் நாங்கள் சட்டத்திற்குட்பட்டு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன என்பதையும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மரியா பத்திரமாகவும், நல்ல உடல் நலத்துடனும் உள்ளார் என காலிட் மலேசியாகினி இணையத் தளத்திடம் தெரிவித்ததாக அந்த இணையத் தளத்தின் செய்தியொன்று தெரிவிக்கின்றது.
மரியாவுக்காக சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறிய காலிட், பலகைப் படுக்கையில் படுப்பதற்கு மரியாவுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டதால், அவருக்கு மெத்தைப் படுக்கையும், தலையணையும், வழங்கப்பட்டுள்ளதோடு, குர்ஆன் புனித நூல் பிரதி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், தொழுகைகளை அவர் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.