Home Featured தமிழ் நாடு “விடுதலை வேந்தனுக்கு வீர வணக்கம்” – காஸ்ட்ரோவுக்கு வைகோ இரங்கல்!

“விடுதலை வேந்தனுக்கு வீர வணக்கம்” – காஸ்ட்ரோவுக்கு வைகோ இரங்கல்!

929
0
SHARE
Ad

fidel-castro

சென்னை – தனது எழுச்சி மிக்க உரைகளில் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவையும், அவரது நண்பன் சே குவாராவையும் அடிக்கடி மேற்கோள் காட்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காஸ்ட்ரோவின் மறைவுக்கு உணர்ச்சிகரமான இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“2016-ஆம் ஆண்டு நவம்பர் 26- ஆம் நாளாகிய இந்த நாள், மனிதகுலத்தின் இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது. ஆம்; உலக வரலாற்றில், யுகயுகந்திரத்திற்கும் புகழ் படைத்த தலைவர்கள் வரிசையில், கியூபாவின் விடுதலை வேந்தன் பிடல் கேஸ்ட்ரோ (வயது 90) இன்று நம்மை விட்டுப் பிரிந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆயுத பலத்தோடு கியூபாவில் அடக்குமுறை ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்த சர்வாதிகாரி பாடிஸ்டுடாவை எதிர்த்து இளம்வயதில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினார் கேஸ்ட்ரோ. மான்கடா படைத்தளத்தைத் தகர்க்க முனைந்து, அந்த முயற்சி தோற்றபின், சகாக்கள் பலரைப் பலிகொடுத்த நிலையில், சியாரா மஸ்ட்ரா குன்றுகளில், ஆயுதப் பயிற்சிகளைத் தந்து, அர்ஜெண்டினாவில் பிறந்த மாவீரன் சே குவேராவின் தோள் வலியை துணைவலியாகப் பெற்று, ஆறு ஆண்டுக்காலப் போராட்டத்தில், சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் படைகளை நொறுக்கி, 1959 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் தலைநகர் ஹவானா வீதிகளில் வெற்றிப் புரட்சிக்கொடி ஏந்தி வீர வலம் வந்தார். கியூபக் குடியரசை நிறுவினார்” என்று தனது இரங்கல் அறிக்கையில் காஸ்ட்ரோவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் வைகோ.

#TamilSchoolmychoice

vaiko_34மார்க்சின் தத்துவத்திலும் லெனினின் கொள்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட போதிலும் கம்யூனிச உலகத்தில் தனித்த ஒளிச்சுடராகப் பிரகாசித்தார் என்றும், உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அருகில் 80 கல் தொலைவில் இருந்துகொண்டே, எதற்கும் அடிபணியாத துணிச்சல்காரராக கியூப அரசை நடத்தினார் என்றும் வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.

“எத்தனையோ கொலை முயற்சிகளில் உயிர் தப்பினார். புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்களை ஒழித்துக் கட்டினார். அணிசேரா நாடுகளின் அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 66 ஆண்டுகள் ஆனபின்னரும், பிடல் கேஸ்ட்ரோ நிறுவிய அரசை அசைக்க முடியவில்லை. அவர் புரட்சிக்காரராக அரசைக் கவிழ்க்க சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டபோது, ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என அவர் முழங்கிய உரை, உலகெங்கும் தேசிய விடுதலைக்குப் போராடுகின்றவர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் வீரியமிக்க உரை ஆகும். எரிமலை போன்ற புரட்சிக்காரராக இருந்தபோதும், அவர் நெஞ்சம் கவர்ந்த உரை இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கம்தான் என்று பிரகடனம் செய்தார். அவரது இதயம் கவர்ந்த புத்தகம் விக்டர் ஹ்யூகோ எழுதிய ஏழை படும் பாடு (Les Miserable) ஆகும்” என்றும் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“வரலாறு அடிமைத்தளைகளில் இருந்து கேஸ்ட்ரோவையும் கியூபாவையும் விடுவித்தது. ஆனால், வரலாற்றின் புகழில் இருந்து பிடல் கேஸ்ட்ரோவை ஒருபோதும் விடுவிக்க முடியாது. தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எத்தனையோ மேடைகளில் கேஸ்ட்ரோ – சேகுவேரா வீரத்தைப் பேசி இருக்கின்றேன். உலகம் போற்றுகின்ற புரட்சி நாயகனுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் வைகோ தனது இரங்கல் உரையில் கூறியுள்ளார்.