கோலாலம்பூர் – செரெண்டா, தாமான் இடாமானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள 64 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அருகிலுள்ள பள்ளி ஒன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பேரிடரில் தங்களின் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு கட்டிக் கொள்ள நிதியுதவியோ அல்லது மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்கவோ அமைச்சு ஆலோசித்து வருவதாக நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார் அறிவித்துள்ளார்.
தற்போது அப்பகுதியில் சீரமைப்புப் பணிகளும், நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த ஆய்வு முடிவின் படி, அப்பகுதியில் இனி மக்கள் குடியிருக்க முடியாது என்பது உறுதியானால், உடனடியாக அப்பகுதிவாசிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வீடுகள் இடிக்கப்படும் என்றும் நோ ஓமார் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடுகளை இழக்கும் அக்குடியிருப்பாளர்களுக்கு வேறு ஒரு இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என்றும் நோ உறுதியளித்துள்ளார்.