Home Featured நாடு 14-வது பொதுத் தேர்தல்: மஇகா தொகுதிகளை இழக்குமா?

14-வது பொதுத் தேர்தல்: மஇகா தொகுதிகளை இழக்குமா?

635
0
SHARE
Ad

general-election-14

கோலாலம்பூர் – வெல்லக் கூடிய வேட்பாளர்கள் மட்டுமே தேசிய முன்னணி சார்பாக நிறுத்தப்படுவார்கள் என பிரதமரும், துணைப் பிரதமரும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் சில தொகுதிகளை அம்னோவிடம் இழக்கக்கூடும் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.

நேற்று ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்த முறை அம்னோவுக்கு மட்டும் என்றில்லாமல் மற்ற உறுப்பியக் கட்சிகளும் வெல்லக் கூடிய தகுதிகளும், வாய்ப்புகளும் கொண்ட வேட்பாளர்களை மட்டுமே அடுத்த பொதுத் தேர்தலில் நிறுத்துவதற்கு இணக்கம் கண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதன்படி, வேட்பாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் சிலவற்றைத் தாங்கள் நிர்ணயித்திருப்பதாகவும், இந்த அடிப்படைத் தகுதிகளைக் கொண்டிருக்காத வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் நஜிப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

zahidhamidicitizen1606இதனால், தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் கூட இந்த அடிப்படைத் தகுதிகள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்படுவர் என்றும் நஜிப் கூறியுள்ளார்.

அதே வேளையில், துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி விடுத்துள்ள அறிக்கையின்படி, எந்தக் கட்சிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அந்தக் கட்சிக்குத்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு வேட்பாளர்கள் வாய்ப்பை இழப்பார்களா?

இதன் காரணமாக, அடுத்த பொதுத் தேர்தலில், மஇகா உட்பட பல கட்சிகளின் நடப்பு வேட்பாளர்களுக்கு மீண்டும் போட்டியிட  வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிகின்றது.

அதுமட்டுமல்லாமல், மஇகா, மசீச, கெராக்கான் போன்ற கட்சிகள் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியுற்ற தொகுதிகள் சிலவற்றை அம்னோ தானே எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஇகாவுக்கு கடந்த 2008 பொதுத் தேர்தலில், 9 நாடாளுமன்ற தொகுதிகளும், 19 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

ஆனால், 2013 பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியை மஇகா விட்டுக் கொடுத்ததன் காரணமாக, 18 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே மஇகா போட்டியிட்டது. இருப்பினும் 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட்டது

தாங்கள் வகுத்துள்ள அடிப்படைத் தகுதிகள் இன்றைய தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலருக்கு இல்லை என்பதைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக, பிரதமரே ஸ்டார் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, மஇகா இழக்கப் போகும் தொகுதிகள் எவை, தகுதி இழக்கப் போகும் நடப்பு வேட்பாளர்கள் யார் என்பது போன்ற ஆரூடங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

பாதிக்கப்படும் மஇகா தொகுதிகள் எவை?

MIC Logo 440 x 215மஇகா கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் கேமரன் மலை, உலு சிலாங்கூர், தாப்பா, செகாமாட் ஆகியவை ஆகும்.

இந்தத் தொகுதிகளில் மஇகா வென்றுள்ள காரணத்தால் இந்தத் தொகுதிகள் மீண்டும் மஇகாவுக்கே ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே வேளையில் மலாய் வாக்குகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட  காப்பார், கோத்தா ராஜா, தெலுக் கெமாங், ஆகிய மூன்று தொகுதிகளில் மஇகா தொடர்ந்து இரண்டு பொதுத் தேர்தல்களில் தோல்வியடைந்து வந்துள்ளதால், இந்த மூன்று தொகுதிகளையும் அம்னோ எடுத்துக் கொள்ளும் என ஆரூடம் கூறப்படுகின்றது.

சுபாங் தொகுதி மலாய்க்காரர் பெரும்பான்மைத் தொகுதியாக மாறுகின்றது

இதற்கிடையில் மஇகா  போட்டியிட்ட மற்றொரு நாடாளுமன்றத் தொகுதியான சுபாங்கிலும் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மஇகா தோல்வியையே தழுவியது.

ஆனால் இந்த முறை இந்தத் தொகுதியிலிருந்து வாக்காளர் மாற்றங்கள் காரணமாக சுமார் 50 ஆயிரம் சீன வாக்காளர்கள் இந்தத் தொகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அதன் காரணமாக, 128 ஆயிரம் வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதி தற்போது சுமார் 73 ஆயிரம் வாக்காளர்களை மட்டுமே கொண்ட தொகுதியாக மாறியுள்ளது. தற்போது இங்கு சுமார் 60 சதவீத மலாய் வாக்காளர்கள் இருப்பதாக முதற்கட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார்11 சதவீத இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இதன் காரணமாக, மஇகா இந்தத் தொகுதியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றாலும், பெரும்பான்மை மலாய் வாக்குகள் என்பதால் இதையும் அம்னோ எடுத்துக்கொள்ள கோரிக்கை விடுக்கலாம் என்ற ஆரூடமும் எழுந்துள்ளது.

அதேசமயத்தில், வாக்காளர்களைத் தொகுதி மாற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை இன்னும் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், சுபாங் தொகுதியில் மீண்டும் சீன வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கும் என்பதோடு, இங்கு மீண்டும் மஇகா வெல்வதும் சிரமமாகிவிடும்.

மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்துள்ள சுங்கை சிப்புட் தொகுதியும் மீண்டும் மஇகாவுக்கே ஒதுக்கப்படுமா அல்லது மற்ற கட்சிகளுடன் பரிமாறிக் கொள்ளப்படுமா என்பதும் இனிமேல்தான் தெரியும்.

மஇகாவில் சில தொகுதிகள் அம்னோவால் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் அதற்கு மாற்றாக இந்திய வாக்காளர்களை அதிகம் கொண்ட சில தொகுதிகள் மஇகாவுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன.

டாக்டர் சுப்ராவும் இணக்கம்

subra-dr-mic-photoஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெல்ல வேண்டியதுதான் முக்கியம் என்பதால், வெல்லக் கூடிய வாய்ப்பு கொண்ட- வாக்காளர்களால் விரும்பப்படுகின்ற – வேட்பாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதற்கு தாங்களும் இணக்கம் கண்டுள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியமும் தெரிவித்துள்ளார்.

மஇகாவும், பொருத்தமான, தரமான, ஆற்றல் மிகுந்த வேட்பாளர்களை அடையாளம் கண்டு பொதுத் தேர்தலில் நிறுத்தும் என்றும் சுப்ரா கூறியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியர்களுக்கான திட்ட வரைவு (புளூபிரிண்ட்) மீதிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போதே சுப்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி கட்சிகள் தங்களுக்கிடையில் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த மனப்பாங்குடன்தான் முடிவுகள் எடுக்கும் என்றும் கூறியுள்ள சுப்ரா, தேசிய முன்னணி நிர்ணயித்துள்ள இலக்குகள், விதிமுறைகளுக்கு ஏற்ப வேட்பாளர்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

-இரா.முத்தரசன்