Home Featured கலையுலகம் ‘நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ – சரத், ராதாரவி அறிவிப்பு!

‘நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ – சரத், ராதாரவி அறிவிப்பு!

926
0
SHARE
Ad

vishal-sarathசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூடியது.

தமிழ்த்தாய் வாழ்த்துவுடன் துவங்கிய இக்கூட்டத்தில், செயலாளர் விஷால் வரவேற்புரை ஆற்றினார். அதன் பின்னர் நூற்றாண்டு விழா கலைஞர்கள் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்களின் காணொளித் தொகுப்பு திரையிடப்பட்டது. ஏ.பி.நாகராஜன் பற்றிய புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பெற்றுக் கொண்டார்.

அதனையடுத்து, நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவரையும் நீக்கவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால், அவர்கள் இருவரையும் நிரந்தரமாக நீக்குவதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ கடிதம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று கூறப்பட்டதால், நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும், தற்போதைய நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இம்மோதலில் நடிகர் கருணாசின் கார் கண்ணாடியும் உடைத்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு மோதலைக் கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தான் நீக்கப்பட்டது குறித்து நடிகர் ராதா ரவி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,

“நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டத்தை சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன். தற்போது உள்ள நிர்வாகிகள் ஒரு வருடத்தில் 750 பேரை சங்க உறுப்பினர்களாக முறைகேடாக நியமித்திருக்கிறார்கள். எங்களுடைய ஆதரவாளர்கள் யாரும் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப்படி சந்திப்போம். தற்போது நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக நீக்குவோம்” என்று கூறினார்.

நடிகர் சரத்குமார் இது குறித்து கூறுகையில், “சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கிறோம் என்பது ஏற்புடையதல்ல.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது நிரந்தர நீக்கம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம். நீக்கம் குறித்து ரசிகர்களும், தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும்” என்றார்.