கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தரக் குடியிருப்பிற்கு (Permanent Resident) விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக ‘பெரித்தா டெய்லி’ கூறுகின்றது.
“அவர் நிரந்தரக் குடியிருப்பிற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளார். அது கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை” என்று உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உள்துறை துணையமைச்சர் நூர் ஜாஸ்லான் வெளியிட்ட தகவல் ஒன்றில், ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றுள்ளார் என இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.