சென்னை – தமிழகத்தை உலுக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:
- முதல்வருக்கு ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் இதய நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை இன்று திங்கட்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் செயற்கை சுவாசக் கருவிகளின் வாயிலாக சுவாசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு எத்தகைய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு அப்போலோ மருத்துவமனை வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமும் இன்று சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர்கள் கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் முதல்வர் உடல் நலம் பெற வேண்டுமென அறிக்கை விடுத்துள்ளனர்.
- ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்குவதில் உதவி புரிய, புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து மருத்துவ நிபுணர்கள் சிலர் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனை வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- இலண்டனில் உள்ள மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பீல் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில்தான் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- கர்நாடக மாநிலத்திற்கும், தமிழகத்திற்கு இடையிலான பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.