சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 1.00 மணிவரையிலான இறுதி நிலவரச் செய்திகள்)
- இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் (இந்திய நேரம்) பாஜக இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அப்போலோ மருத்துவமனை வந்து சேர்ந்தார்.
- ஜெர்மனி செல்லவிருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
- மத்திய அரசாங்கத்தின் சுகாதார இணை அமைச்சர் ஜேபி நட்டா தொலைக்காட்சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் சுகாதார அமைச்சு தொடர்ந்து மத்திய அரசாங்கத்துடனும், அப்போலோ மருத்துவமனையுடனும் தொடர்பில் இருந்து வருவதாகவும், தங்களால் இயன்ற அனைத்து வசதிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
- இன்று காலை முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அப்போலோ மருத்துவமனை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
- இதற்கிடையில் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தேனி மாவட்ட எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர்களில் ஒருவரான அன்புமணி இராமதாஸ், ஒரு மருத்துவர் என்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், மேலும் தெளிவான அறிக்கை தேவை என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ‘ஆஞ்சியோ’ சிகிச்சை வழங்கப்பட்டது என்ற வாசகம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.