Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: கஹானி 2 – தேடப்படும் குற்றவாளி துர்கா உண்மையில் யார்?

திரைவிமர்சனம்: கஹானி 2 – தேடப்படும் குற்றவாளி துர்கா உண்மையில் யார்?

673
0
SHARE
Ad

kahaani-2-poster

கோலாலம்பூர் – கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும் தனது பருவ வயது மகளுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்து வருகின்றார் வித்யா சின்ஹா (வித்யாபாலன்). அதிகாலையில் எழுந்து மகள் மினி சின்ஹாவிற்குத் தேவையானவைகளை எல்லாம் செய்து வைத்துவிட்டு அடித்துப் பிடித்து இரயில் ஏறி அலுவலகம் செல்லும் தினசரி வாழ்க்கையில், வித்யாவின் ஒரே கனவு தனது மகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது தான்.

அமெரிக்காவிற்குச் செல்வதற்காக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் நல்லபடியாக நடந்துவிட, ஆவலோடு மகளிடம் சொல்ல வீட்டிற்கு வந்து பார்க்கிறார். அங்கு மகளைக் காணவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போகும் வித்யாவிற்கு ஒரு மர்ம அழைப்பு வருகிறது. “உன் மகள் வேண்டுமா? நான் சொல்லும் இடத்திற்கு வா” என்கிறது அந்த மர்மக் குரல்.

#TamilSchoolmychoice

அலறி அடித்துக் கொண்டு சாலையில் இறங்கி வித்யா ஓட முயற்சி செய்ய, அங்கு வேகமாக வரும் ஒரு கார் அவரை மோதி தூக்கி எறிகிறது. அவ்வளவு தான்.. கோமா நிலைக்குச் செல்கிறார். விசாரணை செய்ய வரும் போலீஸ் அதிகாரி இந்திரஜித்திற்கு (அர்ஜூன் ராம்பால்) வித்யாவைப் பார்த்ததும் பயங்கர அதிர்ச்சி.

8 ஆண்டுகளுக்கு முன் வயதான பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு, அவரது பேரக் குழந்தையுடன் தப்பித்துச் சென்ற துர்கா ராணி சிங் என்ற போலீசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி தான் இந்த வித்யா என்பதை அறிகிறார்.

யார் அந்த துர்கா? எதற்காகக் கொலை செய்தார்? கடத்தப்பட்ட மினி சின்ஹாவிற்கு என்ன ஆனது? என்பது தான் பிற்பாதி கதையின் சுவாரசியம்.

நடிப்பு

வித்யா சின்ஹா, துர்கா ராணி சிங் என்ற இரண்டு கதாப்பாத்திரங்களிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் வித்யா பாலன். இரண்டு கதாப்பாத்திரங்களிலும் உருவத்திலோ நடிப்பிலோ மாறுபாடுகளைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லாத காரணத்தால், அதன் போக்கிலேயே இயல்பாக நடித்திருக்கிறார்.

தன்னை கைது செய்யக் காத்திருக்கும் போலீசிடமே, “என்னை வெளியே அனுப்ப உதவி செய்யுங்கள். என் மகளைக் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சுவதாகட்டும், “டாக்டர் என்னை நிறைய பழங்கள் சாப்பிடச் சொல்லியிருக்காரு.. அப்ப தான் என்னோட ஸ்கின் பளிச்சினு மாறுமாம். எல்லாம் அருணுக்காகத் தான்” என்று தனது காதலனின் ஆசையை நிறைவேற்ற வேண்டா வெறுப்பாகப் பழங்கள் வாங்குவதுமாக வித்யா நடிப்பில் ஈர்க்கிறார்.

kahani2போலீஸ் அதிகாரி இந்திரஜித் வேடத்தில் அர்ஜுன் ராம்பால் ஏகப் பொருத்தம். பெரிய ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல் நிஜத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் எப்படி இருப்பாரோ அதே போன்றதொரு கதாப்பாத்திரம். அதை அர்ஜூன் ராம்பால் மிக இயல்பாகக் கையாண்டிருக்கிறார்.

“சார் துர்காவ பிடிச்சுக் கொடுத்தா எனக்கு பிரமோஷன் இருக்குல்ல?” என்று தனது உயர் அதிகாரியிடம் அவ்வப்போது கேட்டு நச்சரிப்பதும், “ஹே.. நான் ஒன்னும் இப்பெல்லாம் அடிக்கடி ஸ்மோக் பண்றதில்ல. எப்பவாவது ஒன்னு தான்” என்று தனது மனைவிக்குப் பயந்து சிகரெட்டை மறைப்பதுமாக அவரது நடிப்பு அருமை.

இவர்களோடு, மினி திவானாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அற்புதம். வசனமே இல்லாமல் கண்களில் அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

திரைக்கதை

ஆங்காங்கே சின்னச் சின்ன திருப்பங்களோடு இறுதிவரை நகர்ந்திருக்கிறது திரைக்கதை அமைப்பு. ஆங்காங்கே விறுவிறுப்பு சேர்க்க பயன்படுத்தப்பட்ட உத்திகள் அழகு.

kahani2-aசாலையில் பிச்சைக்காரன் செல்போனை எடுத்து பாதுகாத்து வைத்திருப்பது, மினி தான் சரியாகப் படிக்காததற்கு சொல்லும் அந்த “ஒற்றை” வசனம், அர்ஜுன் ராம்பாலின் முதல் திருமணம் என படத்தில் எங்குமே லாஜிக் இடிக்காத வகையில் சம்பவங்களை அழகாகக் கோர்த்து திரைக்கதை ஆக்கி இருக்கிறார் இயக்குநர் சுஜய் கோஷ்.

குறிப்பாக, இப்படத்தின் மூலமாக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தின் சுவாரசியமே அது தான் என்பதால் அதைப் பற்றி விரிவாகக் கூற முடியாது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை

தாப்பான் பாசுவின் ஒளிப்பதிவில் மேற்கு வங்காளத்தில் இரவு நேர சாலை வெளிச்சங்கள், வீடுகள், மலைப்பிரதேசங்கள் என அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிளிண்டன் செரேஜோவின் பின்னணி இசை ஓகே இரகம்.

மொத்தத்தில், கஹானி 2 – விழிப்புணர்வுடன் கூடிய சுவாரசியமான படம்! தாராளமாகப் பார்த்து ரசிக்கலாம்!

-ஃபீனிக்ஸ்தாசன்