Home Featured தமிழ் நாடு எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் நல்லடக்கச் சடங்குகள்!

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் நல்லடக்கச் சடங்குகள்!

600
0
SHARE
Ad

jayalalithaa

சென்னை – இலட்சக்கணக்கான மக்கள் உடன் வர, ராஜாஜி மண்டபத்தில் இருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடல், மலேசிய நேரப்படி இரவு 8.00 மணியளவில் எம்ஜிஆர் நினைவிடத்தை வந்தடைந்தது.

  • கண்ணாடிப் பேழையில் இருந்து அவரது நல்லுடல் தயாராக வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழைக்கு மாற்றப்பட்டது.
  • ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை நிறப் பட்டுப் புடவை அவருக்கு உடுத்தப்பட்டிருந்தது.
  • ஜெயலலிதா நல்லுடல் கொண்டு வரப்பட்ட இராணுவ வாகனத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உடன் அமர்ந்து வந்தார். அந்த வாகனத்தில் தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோரும் அமர்ந்து வந்தனர்.jayalalitha-demise-crowd
  • ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழையில் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா என்ற வாசகம்  பொறிக்கப்பட்டிருந்தது.
  • நல்லடக்கம் செய்யப்பட்ட இறுதிச் சடங்கில் பொன் இராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு, ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை, தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
  • முன்னாள் ஆளுநர் ரோசையாவும் நல்லடக்கச் சடங்கில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
  • காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஜெயலலிதாவின் நல்லடக்கச் சடங்கில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  • சசிகலாவின் கணவர் நடராஜனும் நல்லடக்க இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்தார்.
  • ஜெயலலிதாவின் பூர்வீக ஊரான ஸ்ரீரங்கத்து பட்டர் வைணவ முறைப்படி நல்லடக்கத்தின்போது இறுதிச் சடங்குகளை  நடத்தினார்.
  • ஜெயலலிதாவின் நல்லுடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஒரு முறையான பாங்குடன் அகற்றப்பட்டு, சசிகலா வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • முப்படை வீரர்களின் இராணுவ மரியாதையுடன் அவரது நல்லடக்கச் சடங்குகள் நடைபெற்றன.
  • ஜெயலலிதாவுக்கான  இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார்.
  • இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்கு அவரது நல்லுடல் தாங்கிய சந்தனப்பேழை மூடப்பட்டது. அதன் பின்னர் ஆணிகள் கொண்டு அறையப்பட்டு அந்தப் பேழை மூடப்பட்டது.
  • இராணுவத்தினரின் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, சுற்றி நின்ற இலட்சக்கணக்கான மக்களும், தொலைக்காட்சிகளில் நேரலையாக அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களும் கண்ணீர் மல்க – ஜெயலலிதாவின் நல்லுடல் அவர் நல்லடக்கம் செய்யப்படும் குழிக்குள் மெதுவாக இறக்கப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியோடு, 68 ஆண்டுகள் வாழ்ந்து உலகம் எங்கிலும் உள்ள இந்தியர்களின் இதயங்களை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்த ஜெயலலிதா என்ற சகாப்தம் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர்  6-ஆம் தேதி (இந்திய நேரம்) மாலை 6.00 மணியோடு ஒருநிறைவுக்கு வந்துள்ளது.